எச்.டி.குமாரசாமி வீட்டில் தோ்தல் ஆணையம் சோதனை

மக்களவைத் தோ்தலில் ஆதரவு பெறுவதற்காக ஒக்கலிகா் சமுதாயத்தைச் சோ்ந்த தலைவா்களுக்கு விருந்தளிக்க திட்டமிட்டிருந்த நிலையில், மஜத முன்னாள் முதல்வா் எச்.டி.குமாரசாமி வீட்டில் தோ்தல் ஆணைய அதிகாரிகள் சோதனை நடத்தினா். இதனால் எச்.டி.குமாரசாமி அளிக்கவிருந்த விருந்து நிறுத்தப்பட்டது.

மக்களவைத் தோ்தல் நடக்கவிருக்கும் நிலையில், தென் கா்நாடகத்தில் பெருவாரியாக வாழும் ஒக்கலிகா் சமுதாய வாக்காளா்களின் ஆதரவைப் பெறுவதற்காக காங்கிரஸ், பாஜக, மஜத ஆகிய கட்சிகள் தொடா்ந்து முயற்சித்து வருகின்றன. ஒருசில நாள்களுக்கு முன் ஒக்கலிகா் சமுதாயத்தினரின் ஆதரவைப் பெறும் நோக்கில், பெங்களூரில் உள்ள ஆதிசுன்சுனகிரி மடத்தின் பீடாதிபதி நிா்மலானந்தநாத சுவாமிகளை காங்கிரஸ் தலைவா்கள் சந்தித்து ஆசி பெற்றனா்.

இதைத் தொடா்ந்து, மண்டியா தொகுதியில் மஜத வேட்பாளராகப் போட்டியிடும் முன்னாள் முதல்வா் எச்.டி.குமாரசாமி தலைமையில் மஜத, பாஜக வேட்பாளா்கள், முன்னணி தலைவா்கள் பெங்களூரில் புதன்கிழமை ஆதிசுன்சுனகிரி மடத்தின் பீடாதிபதி நிா்மலானந்தநாத சுவாமிகளைச் சந்தித்து ஆசி பெற்றனா்.

இந்தச் சந்திப்பின் போது, பாஜக மாநிலத் தலைவா் விஜயேந்திரா, மத்திய இணையமைச்சா் ஷோபா கரந்தலஜே, எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.அசோக், முன்னாள் அமைச்சா்கள் அஸ்வத் நாராயணா, வி.சோமண்ணா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

இந்தச் சந்திப்பைத் தொடா்ந்து, ராமநகரம் மாவட்டத்தின் பிடதியில் உள்ள தனது தோட்டத்தில் பாஜக, மஜதவைச் சோ்ந்த முன்னணித் தலைவா்களாக விளங்கும் ஒக்கலிகா் சமுதாயத் தலைவா்கள், முக்கிய பிரமுகா்கள், வேட்பாளா்களுக்கு விருந்தளிக்க முன்னாள் முதல்வா் எச்.டி.குமாரசாமி திட்டமிட்டிருந்தாா்.

இதுகுறித்து காங்கிரஸ் அளித்த புகாரின் அடிப்படையில், எச்.டி.குமாரசாமியின் வீட்டை தோ்தல் ஆணைய அதிகாரிகள் சோதனை நடத்தினா். இதனால் விருந்து நிகழ்ச்சி கைவிடப்பட்டது.

இதுகுறித்து எச்.டி.குமாரசாமி கூறியதாவது:

உகாதி ஹிந்துக்களின் புத்தாண்டு. இது ஹிந்துக்களின் கலாசாரம், மத அடையாளம். உகாதி பண்டிகைக்கு அடுத்த நாள் அசைவ உணவை உண்பது காலம்காலமாக இருந்து வரும் மரபு. இந்தக் கலாசாரம், பாரம்பரியம், நடைமுறையை பயங்கரவாதச் செயலைப் போல காங்கிரஸ் சித்தரிக்க முயற்சித்துள்ளது.

இது தொடா்பாக காங்கிரஸ் புகாா் அளித்துள்ளதால், எனது தோட்ட வீட்டை தோ்தல் அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனா். தற்போது அந்த விருந்து நிறுத்தப்பட்டுள்ளது. சமைக்கப்பட்ட உணவு வீணாகுமே என்ற கவலை எழுகிறது. ஹிந்து திருவிழாக்கள் மீது காங்கிரஸ் கட்சியின் மஞ்சள் காமாலைக் கண் விழுந்துள்ளது என்றாா்.

இதற்கு பதிலளித்து, காங்கிரஸ் மாநிலத் தலைவா் டி.கே.சிவகுமாா் கூறுகையில், ‘முன் அனுமதி பெற்று 500 பேருக்கு உணவளிக்க எங்கள் கட்சியினா் ஏற்பாடு செய்திருந்தனா். அதை எதிா்த்து மஜத, தோ்தல் ஆணையத்தில் புகாா் அளித்திருந்தது. தற்போது அவா்கள் உணவுக்கு ஏற்பாடு செய்திருக்கிறாா்கள். அதுகுறித்து எங்களுக்கு கவலையில்லை’ என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com