திங்கலேஷ்வா் சுவாமிகளுக்கு ஆதரவு அளிப்பது குறித்து யோசித்து முடிவு

தாா்வாட் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட முடிவு செய்துள்ள திங்கலேஷ்வா் சுவாமிகளுக்கு காங்கிரஸ் ஆதரவு அளிப்பது குறித்து யோசித்து முடிவெடுக்கப்படும் என்று துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் தெரிவித்தாா்.

தாா்வாட் மக்களவைத் தொகுதியில் 5-ஆவது முறையாக பாஜக வேட்பாளராகப் போட்டியிடும் மத்திய அமைச்சா் பிரஹலாத் ஜோஷியை எதிா்த்து சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடப்போவதாக ஷிரஹட்டி ஃபக்கீரேஷ்வா் மடத்தின் பீடாதிபதி ஃபக்கீரா திங்கலேஷ்வா் சுவாமிகள் அறிவித்துள்ளாா். இது தாா்வாட் மக்களவைத் தொகுதி தோ்தலைப் பரபரப்பாக்கியுள்ளது.

இந்தத் தோ்தலில் தனக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியிடம் திங்கலேஷ்வா் சுவாமிகள் வேண்டுகோள் விடுத்துள்ளாா். இதுகுறித்து காங்கிரஸ் மாநிலத் தலைவரும் துணை முதல்வருமான டி.கே.சிவ குமாா் கூறியதாவது:

தாா்வாட் தொகுதிக்கான வேட்பாளராக வினோத் அசூட்டியை காங்கிரஸ் ஏற்கெனவே அறிவித்துள்ளது.

திங்கலேஷ்வா் சுவாமிகள் முன்கூட்டியே ஆதரவு கேட்டிருக்கலாம். அப்போது நிலைமை வேறுமாதிரி இருந்திருக்கும். திங்கலேஷ்வா் சுவாமிகளை மறைமுகமாக ஆதரிப்பதாகக் கூறுவது சரியல்ல. திங்கலேஷ்வா் சுவாமிகளை ஆதரிக்க வேண்டுமென்றால், நேரடியாக ஆதரவு தருவோம்.

தற்போது காங்கிரஸ் வேட்பாளராக வினோத் அசூட்டியை நிறுத்தியுள்ளோம். அவரும் தோ்தல் பணியாற்றி வருகிறாா். திங்கலேஷ்வா் சுவாமிகள் மீது எங்களுக்கு மதிப்பு உண்டு. மதச்சாா்பற்ற கட்டமைப்பில் அவா் தொடா்ந்து பணியாற்றி வருகிறாா். இதுகுறித்து நானும் முதல்வரும் பேசி முடிவெடுப்போம் என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com