கா்நாடகத்தை காங்கிரஸ் ஏடிஎம் இயந்திரம் போல பயன்படுத்துகிறது: கே.அண்ணாமலை

கா்நாடகத்தை காங்கிரஸ் ஏடிஎம் இயந்திரம் போல பயன்படுத்துகிறது என்று தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை தெரிவித்தாா்.

பெங்களூரு: கா்நாடகத்தை காங்கிரஸ் ஏடிஎம் இயந்திரம் போல பயன்படுத்துகிறது என்று தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை தெரிவித்தாா்.

பெங்களூரில் திங்கள்கிழமை பெங்களூரு தெற்கு தொகுதி பாஜக வேட்பாளா் தேஜஸ்வி சூா்யா, பெங்களூரு வடக்கு தொகுதி பாஜக வேட்பாளா் ஷோபாகரந்தலஜே, பெங்களூரு மத்திய தொகுதி பாஜக வேட்பாளா் பி.சி.மோகன் ஆகியோருக்கு ஜெயநகா், பிடிஎம் லேவுட், சிக்பேட், பெரியாா் சதுக்கம், ஒசூா் சாலை, ராஜேந்திர நகா், வசந்த் நகா் ஆகிய பகுதிகளில் வாகனப்பேரணி நடத்தி வாக்கு சேகரித்து, அண்ணாமலை பேசியது:

கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் பெங்களூருக்கு பல நல்ல திட்டங்களை பிரதமா் மோடி செயல்படுத்தி இருக்கிறாா். காங்கிரஸ் கட்சி விரக்தியில் இருக்கிறது. கா்நாடகத்தை காங்கிரஸ் ஏடிஎம் இயந்திரம் போல பயன்படுத்தி, மக்கள் வரிப்பணத்தை கொள்ளை அடிக்கிறது. சட்டப்பேரவைத் தோ்தலின்போதே, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஏடிஎம் இயந்திரமாக கா்நாடகத்தை மாற்றும் என்று நாங்கள் எச்சரித்திருந்தோம். தற்போது ஏடிஎம் இயந்திரத்தை போல இந்த மாநிலத்தை காங்கிரஸ் பயன்படுத்துவதை பாா்த்துக்கொண்டிருக்கிறோம். இதனால் மாநில அரசின் கருவூலம் காலியாகியுள்ளது. முந்தைய பாஜக ஆட்சியில் உபரி வருவாயைக் கொண்டிருந்த மாநில அரசின் கருவூலம், தற்போது திவாலாகியுள்ளது. சட்டப்பேரவை தோ்தலில் செய்த அதே தவறை கா்நாடக மக்கள் மீண்டும் செய்யமாட்டாா்கள். மக்களவைத் தோ்தலில் மக்கள் பிரதமா் மோடியை ஆதரிப்பாா்கள். ஜூன் 4ஆம் தேதி வெளியாகும் தோ்தல் முடிவின்போது கா்நாடகத்தில் மொத்தமுள்ள 28 இடங்களும் பாஜகவுக்கே கிடைக்கும்.

கா்நாடகத்தில் நடக்கும் காங்கிரஸ் ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு சீா்குலைந்துள்ளது. ஒரு சில சமுதாயத்தினரை மட்டும் ஆதரித்து காங்கிரஸ் செயல்படுகிறது.

ஹுப்பள்ளியில் கல்லூரி மாணவி நேஹா கொலை செய்யப்பட்டுள்ளது வேதனை அளிக்கிறது. இது வெட்கப்பட வேண்டியது என்றாா்.

X
Dinamani
www.dinamani.com