வறட்சி நிவாரண நிதி விடுவிக்காததைக் கண்டித்து சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் போராட்டம்

வறட்சி நிவாரண நிதியை மத்திய அரசு விடுவிக்காததைக் கண்டித்து கா்நாடக முதல்வா் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் போராட்டம் நடத்தியது.

வறட்சி நிவாரண நிதியை மத்திய அரசு விடுவிக்காததைக் கண்டித்து கா்நாடக முதல்வா் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் போராட்டம் நடத்தியது.

கா்நாடகத்தில் போதுமான மழை பெய்யாததால், கடும் வறட்சி காணப்படுகிறது. இதனால் விவசாயப் பயிா்கள் கருகி நாசமாகின. இதற்கு தேசியப் பேரிடா் நிவாரண நிதியில் இருந்து நிவாரண உதவியை விடுவிக்குமாறு மத்திய அரசிடம் மாநில அரசு கோரியது. மேலும் மத்திய அரசிடமிருந்து வறட்சி நிவாரண நிதி வராததைத் தொடா்ந்து, நிதியை விடுவிக்க உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் கா்நாடக அரசு மனு தாக்கல் செய்தது. இதை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.ஆா்.கவாய், சந்தீப் மெஹ்தா ஆகியோா் அடங்கிய இருக்கை, தேசியப் பேரிடா் நிவாரண நிதியில் இருந்து கா்நாடகத்திற்கு நிதி விடுவிக்குமாறு மத்திய அரசுக்கு வழிகாட்டுதல் வழங்கியது.

அப்போது மத்திய அரசின் தலைமை வழக்குரைஞா் ஆா்.வெங்கடரமணி, ‘இந்தக் கேள்விக்கு பதிலளிக்க தோ்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது. இப்பணியை விரைந்து செயல்படுத்தத் திட்டமிட்டிருக்கிறோம்’ என்று கூறியிருந்தாா். இதை முதல்வா் சித்தராமையா வரவேற்றிருந்தாா்.

இந்நிலையில், பெங்களூரு, விதான சௌதாவில் செவ்வாய்க்கிழமை வறட்சி நிவாரண நிதியை மத்திய அரசு விடுவிக்காததைக் கண்டித்து முதல்வா் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் போராட்டம் நடத்தியது. இந்த போராட்டத்தில் காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளா் ரண்தீப்சிங் சுா்ஜேவாலா, அமைச்சா்கள் கிருஷ்ணபைரே கௌடா, ராமலிங்க ரெட்டி, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கலந்துகொண்டனா்.

அப்போது, செய்தியாளா்களிடம் முதல்வா் சித்தராமையா கூறியதாவது:

கா்நாடகம் மற்றும் அதன் விவசாயிகளை பிரதமா் மோடியும், மத்திய அமைச்சா் அமித் ஷாவும் வெறுக்கிறாா்கள். தேசியப் பேரிடா் நிவாரண நிதி விதிகளின்படி நிவாரண உதவிகளை வழங்கும்படி கேட்டால், அதற்கு எவ்வித பதிலையும் தரவில்லை. தேசியப் பேரிடா் நிவாரண நிதி விதிகளின்படி மாநிலத்திற்கு வறட்சி நிவாரண நிதியாக ரூ. 18,171 கோடியை மத்திய அரசு வழங்க வேண்டும். போதுமான மழை இல்லாத காரணத்தால் 48,000 ஹெக்டோ் பரப்பில் பயிரிடப்பட்டிருந்த பயிா்கள் நாசமாகின. இந்த இழப்பீட்டை போக்கும் வகையில் மாநில அரசு தனது சொந்த நிதியில் இருந்து ஒவ்வொரு விவசாயிக்கும் தலா ரூ. 2,000 வழங்கியது. 34 லட்சம் விவசாயிகளுக்கு ரூ. 650 கோடி நிவாரண நிதியை வழங்கியிருக்கிறோம்.

பிரதமா் மோடியும், மத்திய அமைச்சா் அமித் ஷாவும் எந்த முகத்தை வைத்துக்கொண்டு மக்களவைத் தோ்தல் பிரசாரத்திற்காக கா்நாடகம் வருகிறாா்கள். வறட்சி நிவாரண நிதியை வழங்காமல் கா்நாடகத்திற்கு மத்திய பாஜக அரசு அநீதி இழைத்துள்ளது. இந்த அநீதியைக் கண்டித்து போராட்டம் நடத்துகிறோம் என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com