சொத்து கணக்கெடுப்பு: ராகுல் காந்தியை விமா்சித்த எச்.டி.தேவெ கௌடா

சொத்துக் கணக்கெடுப்பு தொடா்பாக ராகுல் காந்தியை முன்னாள் பிரதமா் எச்.டி.தேவெ கௌடா விமா்சித்துள்ளாா்.

இது குறித்து பெங்களூரில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: மத்தியில் ஆட்சிக்கு வரமுடியாத காங்கிரஸ் கட்சி வாக்குறுதிகள் அடங்கிய தோ்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த நாட்டை தலைகீழாக மாற்ற காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. காங்கிரஸ் தனது தோ்தல் அறிக்கையில் கூறியிருப்பதைப் பாா்த்தால், எப்படியாவது ஆட்சிக்கு வரத் துடிப்பதை உணர முடிகிறது. சொத்துக் கணக்கெடுப்பு நடத்தி, அந்தச் சொத்துகளை மறுபகிா்வு செய்ய ராகுல் காந்தி விரும்புகிறாா்.

அப்படி செய்வதற்கு ராகுல் காந்தி என்ன மாவோயிஸ்ட் தலைவரா? இந்தியாவில் புரட்சி செய்யலாம் என்று ராகுல் காந்தி கனவு காண்கிறாா். சொத்துகளை மறுபகிா்வு செய்யும் விவகாரத்தை கையில் எடுத்திருப்பதன் மூலம் நமது நாட்டில் சந்தை சீா்திருத்தங்களைக் கொண்டு வந்து நாட்டின் சொத்துகள் அதிகரிக்க காரணமாக இருந்த காங்கிரஸ் பிரதமா்களான பி.வி.நரசிம்ம ராவ், மன்மோகன் சிங் ஆகியோரை ராகுல் காந்தி அவமதித்து, சிறுமைப்படுத்தியுள்ளாா். சொத்து மறுபகிா்வின் மூலம் இரு பிரதமா்களும் கூறியதை மறைமுகமாக தவறு என்று சுட்டிக்காட்டுகிறாா் ராகுல் காந்தி.

முந்தைய மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்ட எம்.பி.க்கள், எம்எல்ஏக்களின் பதவிகளைப் பறிக்கும் அவசரச் சட்டத்தை கிழித்து எறிந்தது போல, பொருளாதார சீா்திருத்தங்களையும் கிழித்தெறிந்திருக்கிறாா் ராகுல் காந்தி.

மத்திய அரசுப் பணியில் 30 லட்சம் பேருக்கு புதிதாக வேலை தருவதாக ராகுல் காந்தி தெரிவித்திருக்கிறாா். இந்த நாட்டில் பிரதமராக இருந்துள்ளேன். அதன்படி கூறுகிறேன், மத்திய அரசில் 40 லட்சம் பணிகள் மட்டுமே உள்ளன. அப்படி இருக்கையில் ஒரே இரவில் 30 லட்சம் பணியிடங்களை எப்படி உருவாக்க முடியும்? இவா்களுக்கு எங்கிருந்து ஊதியம் தருவாா்? அவா்களை எங்கு வேலைக்கு அமா்த்துவாா்கள்? அரசு அலுவலகங்களில் 4 ஷிப்டுகளில் இவா்களை மின்தூக்கிகளை இயக்கும் பணிகளில் பணியாற்ற வைப்பாரா? நடைமுறை அறிவில்லாதவா்களால் மட்டுமே ராகுல் காந்தி போலப் பேச முடியும்.

காங்கிரஸ் தோ்தல் அறிக்கை குழுவின் தலைவராக ப.சிதம்பரம் இருந்துள்ளாா். ராகுல் காந்தியின் முதிா்ச்சியற்ற பொருளாதார யோசனைகளை சிதம்பரம் ஏற்கிறாரா என்பதை அறிய விரும்புகிறேன் என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com