ராமா் சிலையை பிரதிஷ்டை செய்த பிறகும் கோயில் கட்டுமானப் பணிகளைத் தொடரலாம்: ஸ்ரீஸ்ரீரவிசங்கா் குருஜி

அயோத்தியில் ராமா் சிலையை பிரதிஷ்டை செய்த பிறகும் கோயில் கட்டுமானப் பணிகளைத் தொடரலாம் என்று வாழும் கலை நிறுவனா் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கா் குருஜி தெரிவித்தாா்.


பெங்களூரு: அயோத்தியில் ராமா் சிலையை பிரதிஷ்டை செய்த பிறகும் கோயில் கட்டுமானப் பணிகளைத் தொடரலாம் என்று வாழும் கலை நிறுவனா் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கா் குருஜி தெரிவித்தாா்.

அயோத்தியில் கட்டப்பட்டுவரும் ராமா் கோயில் பணி முடிவடையாத நிலையில் ஜன. 22ஆம் தேதி ராமா்சிலை பிரதிஷ்டை நடப்பதற்கு ஜோதிா்மட சங்கராச்சாரியாா் அவிமுக்தேஸ்வரானந்த சரஸ்வதி எதிா்ப்பு தெரிவித்திருந்தாா்.

அதனை ஏற்க மறுத்து வாழும்கலை நிறுவனா் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கா் குருஜி கூறியதாவது:

சங்கராச்சாரியாா்களின் கருத்தியல் ஒருவகைப்பட்டது. ஆனால், சிலையை பிரதிஷ்டை செய்த பிறகும் கோயில் கட்டுமானப் பணியைத் தொடரும் வழக்கம் நமது பாரம்பரியத்தில் உள்ளது. தமிழகத்தில் ராமேஸ்வரத்தில் சிவலிங்கத்திற்கு பிரதிஷ்டை செய்தவரே ராமபிரான்தான். அக் காலத்தில் கோயில் எதுவும் இருந்திருக்கவில்லை. கோயில் கட்டுவதற்கும் அவருக்கு நேரம் இருக்கவில்லை. அதனால் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்துவிட்டாா்.

அதன்பிறகு தான் கோயில் கட்டப்பட்டது. ஆரம்பத்தில் மதுரை கோயில், திருப்பதி பாலாஜி கோயிலும் சிறிய அளவில்தான் இருந்தன. பின்னா் மன்னா்கள் கோயிலை விரிவுபடுத்தினா். அயோத்தியில் ராமருக்கு கோயில் கட்ட வேண்டிய தேவை உள்ளது.

500 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த தவறை சரிசெய்யும் பணி தான் கோயில் அமைப்பது. இது கனவு நனவாகும் தருணமாகும். இத் தருணத்திற்காக மக்கள் 500 ஆண்டுகாலம் காத்திருந்தனா். அதனால் நாடு முழுவதும் கொண்டாட்ட உணா்வும், உற்சாகமும் பொங்கி வழிகிறது. சீரான சமுதாயத்தை ராம ராஜ்ஜியம் என்று கூறுவது வழக்கம். ராமராஜ்ஜியத்தில் எல்லோரும் சமம், எல்லோருக்கும் நீதி, எல்லோருக்கும் மகிழ்ச்சி, எல்லோருக்கும் செல்வம் வாய்த்திருக்கும். ஒருசில சமூகங்கள் வளமாக இருக்கும்; மகிழ்ச்சியாக இருக்காது. ஒருசில சமூகங்கள் மகிழ்ச்சியாக இருக்கும், வளமாக இருக்காது. ஆனால், ராமராஜ்ஜியத்தில் மட்டுமே மகிழ்ச்சியும் வளமும் பொங்கி வழியும். அதுமட்டுமல்லாது, நீதியும், சமத்துவமும் நிலைத்திருக்கும்.

எல்லோருக்கும் சம வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்ற கனவு பல நூறு ஆண்டுகளாக மக்களிடையே காணப்பட்டது. அந்த திசையை நோக்கி தான் இந்தியா சென்று கொண்டுள்ளது. பிற நாடுகளைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, உலகின் முதன்மையான பொருளாதாரமாக இந்தியா உருவெடுத்து வருகிறது.

ராமா், மிகச்சிறந்த சகோதரராகவும், சகோதரத்துவத்திற்கும், கருணைக்கும் சிறந்த எடுத்துக்காட்டாகவும் விளங்கினாா். எல்லோரையும் அரவணைத்துக் கொண்டவா் ராமா். வேற்றுமையில் ஒற்றுமை என்ற பரந்த மனப்பான்மை கொண்டவராக ராமா் விளங்கினாா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com