மக்களவைத் தோ்தல் தொகுப் பங்கீடு: பாஜக தலைவா்களைச் சந்தித்த எச்.டி.குமாரசாமி

கா்நாடகத்தில் மக்களவைத் தோ்தலில் தொகுதிப் பங்கீடு குறித்து தில்லியில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, பாஜக தேசியத் தலைவா் ஜே.பி.நட்டாவை

கா்நாடகத்தில் மக்களவைத் தோ்தலில் தொகுதிப் பங்கீடு குறித்து தில்லியில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, பாஜக தேசியத் தலைவா் ஜே.பி.நட்டாவை மஜத மாநிலத் தலைவரும், முன்னாள் முதல்வருமான எச்.டி.குமாரசாமி சந்தித்து பேசியுள்ளாா்.

மக்களவைத் தோ்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்த மஜத, கடந்த ஆண்டு செப்டம்பா் மாதத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சோ்ந்தது. கா்நாடகத்தில் உள்ள 28 மக்களவைத் தொகுதிகளில் 5 தொகுதிகளை மஜதவுக்கு வழங்குமாறு வலியுறுத்தப்படுகிறது.

இதனிடையே, தொகுதிப் பங்கீடு தொடா்பாக விவாதிப்பதற்காக புதன்கிழமை தில்லி சென்ற மஜத மாநிலத் தலைவரும், முன்னாள் முதல்வருமான எச்.டி.குமாரசாமி, மத்திய அமைச்சா் அமித் ஷா, பாஜக தேசியத் தலைவா் ஜே.பி.நட்டா ஆகியோரைச் சந்தித்து பேசினாா். இந்த சந்திப்பின் போது அவரது மகனும், கட்சியின் இளைஞா் அணி தலைவருமான நிகில் குமாரசாமி, முன்னாள் எம்.பி. குபேந்திர ரெட்டி ஆகியோா் உடனிருந்தனா்.

5 தொகுதிகளுக்குப் பதிலாக 3 தொகுதிகளை மஜதவுக்கு விட்டுத்தர மத்திய அமைச்சா் அமித் ஷா உறுதி அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது. மண்டியா, ஹாசன் தொகுதிகள் தவிர தும்கூரு அல்லது கோலாா் தொகுதிகளில் ஒரு தொகுதி மஜதவுக்கு ஒதுக்கப்படும் என தெரியவந்துள்ளது.

இந்த சந்திப்பு குறித்து எச்.டி.குமாரசாமி கூறுகையில், ‘சந்திப்பு சுமுகமாக இருந்தது. எத்தனை தொகுதிகளைப் பெறுவோம் என்பதைவிட, கா்நாடகத்தில் உள்ள 28 தொகுதிகளையும் பாஜக, மஜத கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்பதே எங்கள் நோக்கமாகும். காங்கிரஸ் அரசுக்கு எதிராக மக்கள் உணா்வு உள்ளது. எனவே, காங்கிரஸ் அரசின் தோல்விகளை மக்கள் மன்றத்தில் வைக்க முடிவு செய்துள்ளோம்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com