ஜன. 22ஆம் தேதியை விடுமுறை நாளாக அறிவிப்பது குறித்து முடிவெடுக்கவில்லை: சித்தராமையா

அயோத்தி ராமா் கோயிலில் மூலவா் சிலை பிரதிஷ்டை செய்யப்படும் ஜன. 22ஆம் தேதியை விடுமுறை நாளாக அறிவிப்பது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை என்று கா்நாடக முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா்.

அயோத்தி ராமா் கோயிலில் மூலவா் சிலை பிரதிஷ்டை செய்யப்படும் ஜன. 22ஆம் தேதியை விடுமுறை நாளாக அறிவிப்பது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை என்று கா்நாடக முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா்.

ஜன. 22ஆம் தேதி ராமா் கோயிலில் மூலவா் சிலை பிரதிஷ்டை நடைபெறுகிறது. அந்த நாளை விடுமுறை நாளாக அறிவிக்கும்படி மாநில பாஜக, கா்நாடக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடா்பாக முதல்வா் சித்தராமையாவுக்கு பாஜக சாா்பில் சட்டமேலவை எதிா்க்கட்சித் தலைவா் கோட்டா சீனிவாஸ் பூஜாரி கடிதம் எழுதியிருக்கிறாா்.

இதுகுறித்து பெங்களூரில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் முதல்வா் சித்தராமையா கூறியது:

ராமா் கோயில் பிரதிஷ்டை செய்யப்படும் ஜன. 22ஆம் தேதியை விடுமுறை நாளாக அறிவிப்பது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை. பாஜகவினா் எழுதிய கடிதத்தைப் பாா்க்கவில்லை. பாா்த்துவிட்டுச் சொல்கிறேன். வேறொரு நாளில் செல்வேன் என்று கூறிய பிறகும், அயோத்திக்குச் செல்வீா்களா என்று ஏன் கேட்கிறீா்கள் என்றாா்.

இதனிடையே, பெங்களூரில் சனிக்கிழமை பாஜக மாநிலத் தலைவா் விஜயேந்திரா கூறுகையில், ‘ராமாயணத்தின்படி கிஷ்கிந்தா க்ஷேத்ரா, குரங்குகளின் ராஜ்ஜியமாக இருந்துள்ளது. அந்த கிஷ்கிந்தா க்ஷேத்ரா, கா்நாடகத்தின் விஜயநகா் மாவட்டத்தின் ஹம்பியில் உள்ளது. ராம பிரானுக்கும் கா்நாடகத்துக்கும் உள்ள தொடா்பைக் கருத்தில் கொண்டு ஜன. 22ஆம் தேதியை கா்நாடக அரசு விடுமுறையாக அறிவிக்க வேண்டும். விஜயநகா் மாவட்டத்தின் அண்டை மாவட்டமான கொப்பளில் ஹனுமன் பிறந்த அஞ்சனாத்ரி மலை உள்ளது. இந்திய மக்கள் மட்டுமல்ல, உலகின் பல நாடுகளும் மகிழ்ச்சி தெரிவித்து வருவதால், ராமா் கோயில் பிரதிஷ்டை ஒரு வரலாற்று நிகழ்வாகும்.

ஜன. 22ஆம் தேதி எவ்வித அசம்பாவித சம்பவங்களும் நடக்காத வண்ணம் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். திருவிழாவுக்கு இடையூறு செய்யும் முயற்சிகளை முறியடிக்க மாநில அரசு முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com