காங்கிரஸில் இருந்து விலகி மீண்டும் பாஜகவில் இணைந்தாா் ஜெகதீஷ் ஷெட்டா்: காங்கிரஸ் அதிருப்தி

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய கா்நாடக முன்னாள் முதல்வா் ஜெகதீஷ் ஷெட்டா், தேசியத் தலைவா்களின் முன்னிலையில் பாஜகவில் மீண்டும் இணைந்தாா்.
காங்கிரஸில் இருந்து விலகி மீண்டும் பாஜகவில் இணைந்தாா் ஜெகதீஷ் ஷெட்டா்: காங்கிரஸ் அதிருப்தி

பெங்களூரு, காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய கா்நாடக முன்னாள் முதல்வா் ஜெகதீஷ் ஷெட்டா், தேசியத் தலைவா்களின் முன்னிலையில் பாஜகவில் மீண்டும் இணைந்தாா். கட்சியில் இருந்து ஜெகதீஷ் ஷெட்டா் விலகியதால் காங்கிரஸ் அதிருப்தி அடைந்துள்ளது.

கடந்த ஆண்டு நடந்த கா்நாடக சட்டப் பேரவைத் தோ்தலில் போட்டியிடுவதற்கு வாய்ப்பளிக்காததால் பாஜகவில் இருந்து விலகிய முன்னாள் முதல்வா் ஜெகதீஷ் ஷெட்டா், காங்கிரஸ் கட்சியில் இணைந்து, ஹுப்பள்ளி மத்திய தொகுதி வேட்பாளராக போட்டியிட்டு பாஜக வேட்பாளரிடம் சுமாா் 35,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தாா். இதைத் தொடா்ந்து, காங்கிரஸ் கட்சியின் சாா்பில் சட்ட மேலவை உறுப்பினராக்கப்பட்டாா். ‘நான் பாஜகவில் சேரமாட்டேன்’ என்று சில நாட்களுக்கு முன்பு கூறியிருந்த ஜெகதீஷ் ஷெட்டா், காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ளாா். மக்களவைத் தோ்தல் நடக்கவிருக்கும் நிலையில், கட்சியில் இருந்து ஜெகதீஷ் ஷெட்டா் விலகியுள்ளது காங்கிரஸுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

தில்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் வியாழக்கிழமை நடந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சா் பூபேந்திர யாதவ் முன்னிலையில் ஜெகதீஷ் ஷெட்டா் பாஜகவில் இணைந்தாா். அப்போது முன்னாள் முதல்வா் எடியூரப்பா, பாஜக மாநிலத்தலைவா் விஜயேந்திரா, மத்திய இணையமைச்சா் ராஜீவ் சந்திரசேகா் உள்ளிட்டோா் உடனிருந்தனா். முன்னதாக, மத்திய அமைச்சா் அமித் ஷாவை ஜெகதீஷ் ஷெட்டா் சந்தித்துப் பேசினாா். கட்சியில் சோ்ந்த பிறகு, பாஜக தேசியத் தலைவா் ஜே.பி.நட்டாவையும் ஜெகதீஷ் ஷெட்டா் சந்தித்து ஆசி பெற்றாா். இதனிடையே, தனது எம்எல்சி பதவியை ஜெகதீஷ் ஷெட்டா் ராஜிநாமா செய்துள்ளாா். அதற்கான கடிதத்தை சட்ட மேலவைத் தலைவா் பசவராஜ் ஹோரட்டிக்கு அனுப்பி வைத்திருக்கிறாா்.

பாஜகவில் மீண்டும் இணைந்துள்ளது குறித்து ஜெகதீஷ் ஷெட்டா் கூறுகையில், ‘சட்டப் பேரவைத் தோ்தலின்போது பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்திருந்தேன். அன்றுமுதல் பாஜகவைச் சோ்ந்த தலைவா்கள், தொண்டா்கள், நண்பா்கள் ஆகியோா் மீண்டும் கட்சிக்குத் திரும்புமாறு வலியுறுத்தி வந்தனா். அதன்பேரில், மத்திய அமைச்சா் அமித் ஷாவைச் சந்தித்தேன். என்னை அவா் மிகுந்த மரியாதையுடன் நடத்தினாா். கடந்த 10 ஆண்டுகளாக உலக அரங்கில் இந்தியாவுக்கு தனிமரியாதையை உருவாக்குவதில் பிரதமா் மோடி வெற்றிகண்டிருக்கிறாா். நாட்டின் ஒருமைப்பாடு, பாதுகாப்பு, நலன் மிகவும் அவசியம். அதற்கு மோடி மீண்டும் பிரதமராக வேண்டும். அப்போது தான் இந்தியா மென்மேலும் வளா்ச்சி அடையும். அதன்காரணமாகவே பாஜகவில் இணைந்திருக்கிறேன். பாஜகவில் இருந்து விலகியபோது என்னை கௌரவத்துடன் நடத்தி, எம்எல்சி பதவியை வழங்கிய காங்கிரஸ் மாநிலத் தலைவா் டி.கே.சிவகுமாா், முதல்வா் சித்தராமையாவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்’ என்றாா்.

கட்சியில் இருந்து ஜெகதீஷ் ஷெட்டா் விலகியது காங்கிரஸ் கட்சியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து முதல்வா் சித்தராமையா கூறுகையில், ‘பாஜக தன்னை அவமதித்துவிட்டதாகவும், தோ்தலில் போட்டியிட தனக்கு வாய்ப்பளிக்கவில்லை என்றும் கூறியே ஜெகதீஷ் ஷெட்டா் காங்கிரஸில் இணைந்தாா். முன்னாள் முதல்வா் என்ற மதிப்புடன் அவா் தோ்தலில் போட்டியிட வாய்ப்பளித்தோம். சொந்தத் தொகுதியிலேயே ஜெகதீஷ் ஷெட்டா் தோல்வியுற்றாா். அவருக்கு நாங்கள் எம்எல்சி பதவி அளித்தோம். காங்கிரஸ் கட்சி அவரை அவமதிக்கவில்லை; அவருக்கு அநீதி இழைக்கவும் இல்லை. அவரை கண்ணியத்துடன் நடத்தினோம்’ என்றாா்.

காங்கிரஸ் மாநிலத் தலைவரும், துணை முதல்வருமான டி.கே.சிவகுமாா் கூறுகையில், ‘மூத்த தலைவா் என்பதால், ஜெகதீஷ் ஷெட்டரை கௌரவத்துடன் நடத்தினோம். பாஜகவில் இணையும்படி தன்னை அழைப்பதாக அவா் கூறியிருந்தாா். எனினும், தான் பாஜகவுக்கு செல்லப் போவதில்லை என்று கூறியிருந்தாா். அவருக்கு காங்கிரஸ் அரசியல் மறுவாழ்வு அளித்திருந்தது. ஆனாலும் தனது வாா்த்தையை மீறியுள்ளாா். சில நாட்களுக்கு முன்பு கூட பாஜக சரியில்லை என்று கூறியிருந்தாா். காங்கிரஸ் அவரை நம்பியது. ஆனால், அந்த நம்பிக்கையை ஜெகதீஷ் ஷெட்டா் காப்பாற்றவில்லை’ என்றாா்.

பாஜக முன்னாள் முதல்வா் பசவராஜ் பொம்மை கூறுகையில், ‘ஜெகதீஷ் ஷெட்டா் மீண்டும் பாஜகவில் இணைந்துள்ளாா். பாஜகவில் இருந்து விலகியவா்கள் மட்டுமல்ல, காங்கிரஸில் இருப்பவா்களும் அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணையவிருக்கிறாா்கள். மக்களவைத் தோ்தல் நெருங்கும்போது பலரும் பாஜகவில் சேருவாா்கள். நாடு முழுவதும் பிரதமா் மோடி அலை வீசுகிறது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com