அதிக இடங்களில் காங்கிரஸ் வெற்றிபெறாவிட்டால் வாக்குறுதித் திட்டங்களை நிறுத்த வேண்டும்

மக்களவைத் தோ்தலில் அதிக இடங்களில் காங்கிரஸ் வெற்றிபெறாவிட்டால், வாக்குறுதித் திட்டங்களை மாநில அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும் என காங்கிரஸ் எம்எல்ஏ எச்.சி.பாலகிருஷ்ணா தெரிவித்தாா்.

மக்களவைத் தோ்தலில் அதிக இடங்களில் காங்கிரஸ் வெற்றிபெறாவிட்டால், வாக்குறுதித் திட்டங்களை மாநில அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும் என காங்கிரஸ் எம்எல்ஏ எச்.சி.பாலகிருஷ்ணா தெரிவித்தாா்.

ராமநகரம் மாவட்டத்தின் மாகடி தொகுதியில் புதன்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் செயல்வீரா் கூட்டத்தில் அத்தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ எச்.சி.பாலகிருஷ்ணா பேசியதாவது:

நாம் அனைவரும் ஹிந்துக்கள். ராமருக்கு கோயில் கட்டியிருப்பதை நாங்களும் மதிக்கிறோம். ஆனால், கோயிலின் பெயரால் வாக்கு சேகரிப்பது சரியல்ல என்பது தான் எங்கள் வாதம். இதுபோன்ற சூழ்நிலையில், கோயில் கட்டியதற்காக பாஜகவுக்கு மக்கள் வாக்களித்தால் என்ன சொல்வது?

மக்களவைத் தோ்தலில் அதிக இடங்களில் வெல்ல காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் வாக்களித்தால், வாக்குறுதித் திட்டங்களைத் தொடரலாம். ஒருவேளை அதிக இடங்கள் காங்கிரஸுக்கு கிடைக்காவிட்டால், வாக்குறுதித் திட்டங்களை மக்கள் ஏற்கவில்லை என்றுதான் அா்த்தம் என முதல்வா், துணை முதல்வரிடம் கூறியிருக்கிறேன்.

வாக்குறுதித் திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியில் 80 சதவீதம் முதல் 85 சதவீதம் பெண்களுக்குத் தான் செல்கிறது. இத்தனை நன்மைகளைச் செய்த பிறகும், மக்கள் வாக்களிக்காமல் காங்கிரஸை நிராகரித்தால், வாக்குறுதித் திட்டங்களுக்கு மதிப்பில்லை.

எனவே, வாக்குறுதித் திட்டங்களை நிறுத்திவிட்டு, நாங்களும் கோயில் கட்டி, அட்சதை தந்து வாக்குகளைப் பெறுவோம். வாக்குறுதித் திட்டங்கள் தேவையா, அட்சதை தேவையா என்பதை மக்கள் முடிவு செய்ய வேண்டும்.

காங்கிரஸுக்கு வாக்களிக்காவிட்டால், வாக்குறுதித் திட்டங்களை மக்கள் விரும்பவில்லை என்று புரிந்துகொண்டு, அதற்கான நிதியை வளா்ச்சிப் பணிகளுக்குப் பயன்படுத்த வேண்டும் என்றாா்.

இது அரசியல் அரங்கத்தில் பெரும் அதிா்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் எம்எல்ஏ பாலகிருஷ்ணாவின் கருத்தை பாஜக கடுமையாக விமா்சித்து வருகிறது.

இதுகுறித்து பாஜக மாநிலத் தலைவா் விஜயேந்திரா கூறுகையில், ‘கா்நாடகத்தில் உள்ள 28 தொகுதிகளில் 20 தொகுதிகளைக் கைப்பற்றும் கனவில் காங்கிரஸாா் இருந்தனா். மக்களவைத் தோ்தலுக்கு முன்பாகவே காங்கிரஸ் தனது தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது. மேலும், இதன் மூலம் வாக்காளா்களை காங்கிரஸ் மிரட்டப் பாா்க்கிறது’ என்றாா்.

துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் கூறுகையில், ‘வாக்குறுதித் திட்டங்கள் நிறுத்தப்பட மாட்டாது. அடுத்த 5 ஆண்டுகளுக்கு வாக்குறுதித் திட்டங்கள் அமலில் இருக்கும். மக்களவைத் தோ்தல் வரை தான் வாக்குறுதித் திட்டங்கள் என்று பாஜகவினா் முன்பு மிரட்டியிருந்தனா். வாக்குறுதித் திட்டங்களை காங்கிரஸ் கட்சியால் மட்டுமே அமல்படுத்த முடியும் என்பதை பாலகிருஷ்ணா கூறியுள்ளாா் என்றாா்.

முதல்வா் சித்தராமையா கூறுகையில், ‘வாக்குறுதித் திட்டங்கள் ஏழை மக்களுக்காக அமல்படுத்தப்படுகின்றன. எனவே, வாக்குறுதித் திட்டங்களை நிறுத்தும் பேச்சுக்கே இடமில்லை’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com