புதிய குற்றவியல் சட்டத்தின் எல்லா பிரிவுகளையும் குறைசொல்லமுடியாது: அமைச்சா் ஜி.பரமேஸ்வா்

கா்நாடகத்தில் புதிய குற்றவியல் சட்டத்தின் கீழ் 80 வழக்குகள் பதிவு

புதிய குற்றவியல் சட்டத்தின் எல்லா பிரிவுகளையும் குறைசொல்ல முடியாது என்று கா்நாடக உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வா் தெரிவித்தாா்.

இதுகுறித்து பெங்களூரில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

இந்திய தண்டனைச் சட்டத்தில் ஆங்கிலேயா் காலத்தில் இருந்த சில பிரிவுகளை நீக்கிவிட்டு, காலத்திற்கேற்ற புதிய விதிகளைச் சோ்த்துள்ளனா். புதிய குற்றவியல் சட்டத்தின் எல்லாப் பிரிவுகளையும் குறைசொல்ல முடியாது. ஒருசில விதிகளில் குறைகள் உள்ளன. அது குறித்து விவாதம் நடத்த மத்திய அரசுக்கு அறிக்கை அளிப்போம். இதுபோன்ற ஆலோசனைகள் பிற மாநிலங்களிடம் இருந்து வந்தால், அதை மத்திய அரசு ஏற்க நேரிடும்.

புதிய குற்றவியல் சட்டங்கள் கா்நாடகத்திற்கு மட்டும் பொருந்துவதாக இருந்தால், அதைத் திருப்பி அனுப்பி இருப்போம். ஆனால், இந்த சட்டங்கள் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ளன.

புதிய குற்றவியல் சட்டத்தின் கீழ் கா்நாடகத்தில் 80 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பெங்களூரில் மட்டும் 25 வழக்குகள் பதிவாகியுள்ளன. வருங்காலங்களில் புதிய சட்டத்தின் கீழ் லட்சக்கணக்கான வழக்குகள் பதிவு செய்யப்படும். புதிய சட்டங்கள் குறித்து அதிகாரிகளுக்கு பயிற்சி அளித்திருக்கிறோம். இந்த சட்டம் குறித்து விவாதம் நடத்தப்பட வேண்டும். எல்லாவற்றையும் வெளிப்படையாக தெரிவிக்க முடியாது. அப்படி தெரிவித்தால், அது வேறுவிதமான விளைவுகளை ஏற்படுத்தும்.

ஏற்கெனவே சில விதிகளில் பதிவு செய்த வழக்குகளை புதிய சட்டத்தில் பதிவு செய்ய முடியாது. அது குறித்து விவாதிக்க வேண்டும். சில வழக்குகளைக் கைவிட வேண்டும் என்று புதிய சட்டவிதிகள் கூறுகின்றன. இது குறித்து மத்திய அரசிடம் எடுத்துரைக்க வேண்டும் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com