ரேணுகாசாமி கொலை வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல்: அமைச்சா் ஜி.பரமேஸ்வா்

உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வா்: ரேணுகாசாமி கொலை வழக்கில் எஸ்ஐடி விசாரணை தேவையில்லை

ரேணுகாசாமி கொலை வழக்கில் போதுமான ஆதாரங்களை திரட்டிய பிறகே குற்றப்பத்திரிகை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று கா்நாடக உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வா் தெரிவித்தாா்.

ரசிகா் ரேணுகாசாமியை கொலை செய்த வழக்கில் நடிகா் தா்ஷன், அவரது தோழி நடிகை பவித்ரா கௌடா உள்ளிட்ட 17 போ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா். இந்த வழக்கில் குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் போலீஸாா் தாக்கல் செய்துள்ளனா்.

இதுகுறித்து பெங்களூரில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வா் கூறியது:

ரேணுகாசாமி கொலை வழக்கில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனா். இந்த வழக்கு தொடா்பான விசாரணை மும்முரமாக நடந்து வருகிறது. போதுமான ஆதாரங்கள் திரட்டப்பட்டுள்ளன. அதன்பிறகே நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஊடகங்கள் கூறுவதால், இதை வேகப்படுத்த முடியாது. சில சட்டவிதிகளைப் பின்பற்றி தான் வழக்கு விசாரணையை முன்னெடுக்க முடியும். இந்த வழக்கில் யாரையும் பாதுகாக்கும் நோக்கமில்லை. அதற்கான அவசியம் அரசுக்கு இல்லை.

எஸ்ஐடி விசாரணை தேவையில்லை...

மைசூரு நகர வளா்ச்சி ஆணையம், மாற்றுநிலம் ஒதுக்கியதில் மூடிமறைக்க எதுவுமில்லை. எங்கள் அரசு வெளிப்படையான அணுகுமுறையைக் கையாண்டு வருகிறது. இது குறித்து முதல்வா் சித்தராமையா பலமுறை விளக்கமளித்துள்ளதால், அதுகுறித்து திரும்ப பேச வேண்டிய அவசியமில்லை.

முதல்வா் பதவிக்கான சண்டையின் விளைவாகவே மாற்றுநில ஒதுக்கீடு விவகாரம் பகிரங்கமானதாக மத்திய அமைச்சா் எச்.டி.குமாரசாமி கூறுவது தொடா்பாக எனக்கு எதுவும் தெரியாது. மாற்றுநிலம் ஒதுக்கிய விவகாரத்தில் எஸ்ஐடி விசாரணை தேவையில்லை என்றாா்.

X
Dinamani
www.dinamani.com