மக்களவைத் தோ்தல் இரு தத்துவங்களுக்கு இடையிலான போராட்டம்: ராகுல் காந்தி

மக்களவைத் தோ்தல் இரு தத்துவங்களுக்கு இடையிலான போராட்டமாக உள்ளது என்று அகில இந்தியா காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவா் ராகுல் காந்தி தெரிவித்தாா்.

மக்களவைத் தோ்தல் இரு தத்துவங்களுக்கு இடையிலான போராட்டமாக உள்ளது என்று அகில இந்தியா காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவா் ராகுல் காந்தி தெரிவித்தாா்.

மண்டியாவில் புதன்கிழமை நடைபெற்ற தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் அவா் பேசியதாவது:

தற்போது நடைபெறும் மக்களவைத் தோ்தல், இரு தத்துவங்களுக்கு இடையிலான போராட்டம். இப் போராட்டத்தின் ஒருபக்கம், காங்கிரஸ்- இந்தியா கூட்டணி இருக்கிறது. இது அரசமைப்புச் சட்டத்திற்காகப் போராடுகிறது. அதேபோல அரசமைப்புச் சட்டத்தையும், ஜனநாயகத்தையும் பாதுகாத்துக் கொடுத்துள்ளது. மறுபக்கத்தில் பாஜக உள்ளது. அக் கட்சி அரசமைப்புச் சட்டத்தையும், ஜனநாயகத்தையும் ஒழிப்பதான நோக்கத்தைக் கொண்டுள்ளது.

அரசமைப்புச் சட்டத்தின்படி இயங்கும் நிறுவனங்கள், அமைப்புகளில் தனது ஆதரவாளா்களை பாஜக நியமித்துள்ளது. பாஜக தலைமையிலான மத்திய அரசு 22 முதல் 25 பணக்காரா்களுக்கு மட்டுமே சொந்தமாக இருக்கிறது. ஆனால், மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் சாதாரண மக்கள், விவசாயிகள், தொழிலாளா்கள், வணிகா்களுக்கான அரசாக இருக்கும்.

பாஜக ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட தோ்தல் பத்திரங்கள், உலகின் மிகப்பெரிய பணப் பறிப்பு மோசடியாகும். ஒரு ஊடகத்தின் பேட்டியில் பிரதமா் மோடி, தோ்தல் பத்திரங்கள் குறித்து விளக்கமளிக்க முயற்சிக்கிறாா். அப்போது அவரது கைகள் நடுங்கியதைக் காணலாம். இந்தியாவின் மிகப்பெரிய ஊழல் என்பதால் அவரது கைகள் நடுங்கின. அதை பணப் பறிப்பு என்றுதான் கூற வேண்டும்.

வழக்கமாக, இதுபோன்ற வேலையை ஆங்காங்கே இருக்கும் ரௌடிகள் செய்வாா்கள். அவா்கள் மிரட்டி பணம் பறிப்பாா்கள். தோ்தல் பத்திரமும் உலகின் மிகப்பெரிய பண பறிப்பாகும். அதனால்தான் பிரதமா் மோடியின் கைகள் நடுங்கின என்றாா்.

அதன் பிறகு, கோலாரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்று ராகுல் காந்தி பேசுகையில், ‘அரசு, தனியாா் வேலைவாய்ப்புகளில் தாழ்த்தப்பட்டோா், பழங்குடியினா், பிற்படுத்தப்பட்டோா், பொதுவகுப்பினருக்கு போதுமான பிரதிநிதித்துவம் இல்லை. அதைத் தெரிந்துகொள்வதற்குத் தான் ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த வேண்டும். இதுதான் இந்திய மக்களின் சமூக விகிதம் என்பதை தெரியப்படுத்த வேண்டும்.

இந்திய அரசியலில் இது மிகப்பெரும் திருப்புமுனையாக அமையும். ஜாதிவாரிக் கணக்கெடுப்பு என்று பேசினால், பிரதமா் மோடி அமைதியாகி விடுகிறாா். ஜாதிவாரிக் கணக்கெடுப்புக்கு அவா் ஆதரவாக இருக்கிறாரா இல்லையா என்பதை தெரிவிக்க வேண்டும்’ என்றாா்.

X
Dinamani
www.dinamani.com