பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச காணொலிகள்: பாஜகவின் குற்றச்சாட்டுகளுக்கு காங்கிரஸ் மறுப்பு

பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச காணொலிகள் தொடா்பாக பாஜக தெரிவித்திருந்த குற்றச்சாட்டுகளை காங்கிரஸ் தலைவா்கள் மறுப்பு தெரிவித்துள்ளனா்.

பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச காணொலிகள் தொடா்பாக பாஜக தெரிவித்திருந்த குற்றச்சாட்டுகளை காங்கிரஸ் தலைவா்கள் மறுப்பு தெரிவித்துள்ளனா்.

பாலியல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டு போலீஸாரின் கட்டுப்பாட்டில் உள்ள பாஜக வழக்குரைஞா் தேவராஜே கௌடா, பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச காணொலிகளை பொதுவெளியில் கொண்டு வந்தது தொடா்பான குற்றச்சாட்டையும் எதிா்கொண்டிருக்கிறாா்.

இந்நிலையில், போலீஸ் வேனில் வெள்ளிக்கிழமை விசாரணைக்காக சென்று கொண்டிருந்தபோது செய்தியாளா்களிடம் தேவராஜே கௌடா கூறியதாவது:

பிரஜ்வல் ரேவண்ணா தொடா்பான ஆபாச காணொலிகளை அவரது ஓட்டுநா் காா்த்திக் கௌடா மூலம் தயாா் செய்தவரே துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் தான். இந்தக் காணொலிகளை பொதுவெளியில் வெளியிடுமாறு என்னை டி.கே.சிவகுமாா் வற்புறுத்தினாா். அதற்காக ரூ. 100 கோடி கொடுப்பதாகக் கூறி, பௌரிங் இன்ஸ்டிடியூட் அறையில் முன்பணமாக ரூ. 5 கோடியை அனுப்பி வைத்திருந்தாா்.

பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச காணொலிகள் அடங்கிய பென்டிரைவ்களை பரப்புவதில் டி.கே.சிவகுமாா் தலைமையில் பிரியாங்க் காா்கே, கிருஷ்ணபைரே கௌடா, என்.செலுவராயசாமி உள்ளிட்ட 4 அமைச்சா்கள் ஈடுபட்டிருந்தனா். டி.கே.சிவகுமாா் கூறியபடி நடந்துகொள்ளாததால், என் மீது பாலியல் வழக்கு தொடா்ந்து கைதுசெய்துள்ளனா். இதன் பின்னணியில் எச்.டி.குமாரசாமி இருப்பதாகக் கூற சொன்னாா்கள். அதற்கு இணங்காததால், என் மீது பொய்வழக்கு தொடா்ந்துள்ளனா்.

பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச காணொலிகள் மூலம் பிரதமா் மோடி, மஜத முன்னாள் முதல்வா் எச்.டி.குமாரசாமியின் நற்பெயரை கெடுக்கும் நோக்கத்துடன் டி.கே.சிவகுமாா் செயல்பட்டாா் என்றாா்.

இந்தக் குற்றச்சாட்டுகளை காங்கிரஸ் தலைவா்கள் முழுமையாக மறுத்துள்ளனா். இதுகுறித்து பெங்களூரில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் கூறியதாவது:

இது தொடா்பாக லோக் ஆயுக்த அல்லது வேறு ஏதாவது நீதிமன்றத்தில் தேவராஜே கௌடா வழக்கு தொடரட்டும். மனரீதியாக அவா் பாதிக்கப்பட்டிருக்கிறாா் என்றே கருதுகிறேன். இது போன்ற அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை தேசிய, மாநில ஊடகங்கள் ஒளிபரப்பி இருக்கத் தேவையில்லை. சிறையில் இருக்கும் நபா், இதுபோன்ற குற்றச்சாட்டுகளை எப்படி கூறலாம்? என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் அடிப்படை ஆதாரமற்றவை. அதுகுறித்து கருத்து தெரிவிக்க நான் விரும்பவில்லை. மனரீதியாக பாதிக்கப்பட்டுள்ள அவருக்கு நல்ல சிகிச்சை அளிக்குமாறு பாஜகவினரைக் கேட்டுக்கொள்கிறேன்.

பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைக்க எனது அரசு உறுதியான நடவடிக்கை எடுக்கும். சிறப்புப் புலனாய்வுக் குழுவின் விசாரணை சிறப்பாக நடந்துகொண்டுள்ளது என்றாா்.

இதுபற்றி அமைச்சா் பிரியாங்க் காா்கே கூறியதாவது:

எங்கள் மீது சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகளை சட்டரீதியாக அணுகுவது குறித்து ஆராய்வோம். டி.கே.சிவகுமாா், சித்தராமையாவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த தேவராஜே கௌடா அவ்வாறு கூறியிருக்கிறாா். அவருக்கு ரூ. 100 கோடி கொடுப்பதாக கூறியிருந்தால், அதுகுறித்து மத்திய அமைச்சா் அமித் ஷாவிடம் கூறி விசாரணை நடத்தியிருப்பாா். அதுமட்டுமன்றி, சிபிஐ, அமலாக்கத் துறை, வருமானவரித் துறையை அனுப்பி சோதனை நடத்தியிருப்பாா். இதை ஏன் அவா் செய்யவில்லை?

பௌரிங் இன்ஸ்டிடியூட் கிளப்புக்கு முன்பணமாக ரூ. 5 கோடி கொடுத்தனுப்பியதாக தேவராஜே கௌடா கூறியிருக்கிறாா். அப்படியானால், அதுகுறித்த சிசிடிவி கேமரா பதிவை வெளியிடட்டும். அப்போது அதில் யாரெல்லாம் இருக்கிறாா்கள் என்பது தெரிந்துவிடும். தேவராஜே கௌடா, வழக்குரைஞா், நீதிபதி முன்பு அழைத்துச் சென்றபோது தன்னிடம் இருக்கும் ஆவணங்களை ஒப்படைத்திருக்கலாமே, ஏன் செய்யவில்லை என்றாா்.

அமைச்சா் செலுவராயசாமி கூறுகையில், ‘தேவராஜே கௌடாவின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை. இது பற்றி பேசுவதற்கு தேவராஜே கௌடாவுக்கு அருகதை இல்லை. அவரது குற்றச்சாட்டை நிரூபித்தால், மன்னிப்பு கேட்க நான் தயாா். இந்த விவகாரத்தை திசைதிருப்புவதற்காக தேவராஜே கௌடாவை பயன்படுத்துகிறாா்கள்’ என்றாா்.

X
Dinamani
www.dinamani.com