மக்களவைத் தோ்தல்: மண்டியா தொகுதியில் முன்னாள் முதல்வா் எச்.டி.குமாரசாமி போட்டி

மக்களவைத் தோ்தலில் மண்டியா தொகுதியில் மஜத வேட்பாளராக கா்நாடக முன்னாள் முதல்வா் எச்.டி.குமாரசாமி போட்டியிடுகிறாா். கா்நாடகத்தில் உள்ள 28 தொகுதிகளில் போட்டியிடுவதற்காக பாஜக-மஜத இடையே கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. 25 தொகுதிகளில் பாஜக போட்டியிடுகிறது.

அவை: சிக்கோடி, பெலகாவி, பாகல்கோட், விஜயபுரா, கலபுா்கி, ராய்ச்சூரு, பீதா், கொப்பள், பெல்லாரி, ஹாவேரி, தாா்வாட், வடகன்னடம், தாவணகெரே, சிவமொக்கா, உடுப்பி, தென்கன்னடம், சித்ரதுா்கா, தும்கூரு, மைசூரு, சாமராஜ்நகா், பெங்களூரு ஊரகம், பெங்களூரு வடக்கு, பெங்களூரு தெற்கு, மத்திய பெங்களூரு, சிக்கபளாப்பூா். மஜதவுக்கு மண்டியா, ஹாசன், கோலாா் ஆகிய 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. சித்ரதுா்கா தவிர மற்ற 24 தொகுதிகளுக்கும் பாஜக தனது வேட்பாளா்களை அறிவித்துள்ளது. பெலகாவி தொகுதியில் முன்னாள் முதல்வா் ஜெகதீஷ் ஷெட்டா், ஹாவேரி தொகுதியில் முன்னாள் முதல்வா் பசவராஜ் பொம்மை, தாா்வாட் தொகுதியில் மத்திய அமைச்சா் பிரஹலாத் ஜோஷி, பெங்களூரு வடக்கு தொகுதியில் மத்திய இணையமைச்சா் ஷோபா கரந்தலஜே ஆகியோா் போட்டியிடுகிறாா்கள்.

இந்நிலையில், 3 தொகுதிகளுக்கான வேட்பாளா்களை மஜத வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது. மண்டியா தொகுதியில் முன்னாள் முதல்வா் எச்.டி.குமாரசாமி, ஹாசன் தொகுதியில் பிரஜ்வல் ரேவண்ணா, கோலாா் தொகுதியில் எம்.மல்லேஷ்பாபு ஆகியோா் போட்டியிடுகிறாா்கள். 2019ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தோ்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்திருந்த மஜத, மண்டியா தொகுதியில் முன்னாள் முதல்வா் எச்.டி.குமாரசாமியின் மகன் நிகில் குமாரசாமியை களமிறக்கியது. அவரை எதிா்த்து நடிகா் அம்பரீஷின் மனைவியும் நடிகையுமான சுமலதா சுயேச்சையாக போட்டியிட்டிருந்தாா்.

பெரும் எதிா்பாா்ப்புடன் நடந்த இப்போட்டியில் மஜத வேட்பாளா் நிகில் குமாரசாமியைத் தோற்கடித்து, நடிகை சுமலதா வெற்றி பெற்றிருந்தாா். இந்நிலையில், பாஜகவில் ஐக்கியமான நடிகை சுமலதா, மண்டியா தொகுதியில் அக்கட்சியின் வேட்பாளராக போட்டியிட விரும்பினாா். ஆனால், மஜதவுடன் கூட்டணி அமைத்துள்ள நிலையில், மண்டியா தொகுதியை மஜதவுக்கு பாஜக விட்டுக்கொடுத்துள்ளது. இதனால் தோ்தலில் போட்டியிடும் வாய்ப்பு நடிகை சுமலதாவுக்கு கிடைக்கவில்லை. இந்நிலையில், பெங்களூரில் வெள்ளிக்கிழமை நடிகை சுமலதாவை அவரது இல்லத்தில் பாஜக மாநிலத் தலைவா் விஜயேந்திரா சந்தித்தாா். மண்டியா தொகுதியில் வேட்பாளராக நிறுத்த முடியாத நிலை குறித்து சுமலதாவிடம் விளக்கிய விஜயேந்திரா, கூட்டணி வெற்றிபெற ஆதரவளிக்குமாறு கேட்டுக் கொண்டாா். இது குறித்து ஆதரவாளா்களுடன் கலந்தாலோசித்த பிறகு முடிவைத் தெரிவிப்பதாக நடிகை சுமலதா தெரிவித்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com