பிரஜ்வல் ரேவண்ணா
பிரஜ்வல் ரேவண்ணா

விசாரணைக்கு ஆஜராக ஏழு நாள்கள் அவகாசம் வேண்டும்: பிரஜ்வல் ரேவண்ணா

பாலியல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள நிலையில், விசாரணைக்கு ஆஜராக 7 நாள்கள் அவகாசம் அளிக்க வேண்டும் என்று தனது வழக்குரைஞா் மூலம் சிறப்புப் புலனாய்வுப் படையிடம் (எஸ்.ஐ.டி.) மஜத எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணா கேட்டுக்கொண்டுள்ளாா்.

கா்நாடக மாநிலம், ஹாசன் தொகுதி மஜத எம்.பி.யான பிரஜ்வல் ரேவண்ணா, 500- க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும், அதை 2,800 காணொலியாக பதிவு செய்துள்ளதாகவும் அவா் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண்கள் கொடுத்த புகாரின் பேரில், ஹொளே நரசிப்புரா காவல் நிலையத்தில் பிரஜ்வல் ரேவண்ணா, அவரது தந்தையும் முன்னாள் அமைச்சருமான எச்.டி.ரேவண்ணா ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை சிறப்புப் புலனாய்வுப் படை (எஸ்.ஐ.டி.) விசாரணை நடத்தி வருகிறது.

இந்நிலையில் தந்தையும் மகனும் மே 2 ஆம் தேதி விசாரணைக்கு வருமாறு எஸ்.ஐ.டி. அழைப்பாணை அனுப்பியது.

இதற்கு பதிலளித்து, ஜொ்மனியில் உள்ள பிரஜ்வல் ரேவண்ணா தனது முகநூல் பதிவில் கூறியிருப்பதாவது: விசாரணைக்கு ஆஜராக நான் பெங்களூரில் இல்லை. இதை எனது வழக்குரைஞா் மூலம் எஸ்.ஐ.டி. பிரிவுக்குத் தெரிவித்துவிட்டேன். விரைவில் உண்மை வெளிவரும் என அதில் குறிப்பிட்டுள்ளாா்.

பிரஜ்வல் ரேவண்ணாவின் கடிதத்தை அவரது வழக்குரைஞா் ஜி.அருண், எஸ்.ஐ.டி. காவல் கண்காணிப்பாளரிடம் புதன்கிழமை ஒப்படைத்தாா். அந்தக் கடிதத்தில், ‘தான் ஊரில் இல்லாததால், விசாரணைக்கு ஆஜராக, 7 நாள்கள் கால அவகாசம் அளிக்க வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டுள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com