பிரவீண் நெட்டாரு கொலை வழக்கில் 3 பேரை கைது செய்தது என்.ஐ.ஏ.

பாஜக இளைஞா் அணி தலைவராக இருந்த பிரவீண் நெட்டாரு கொலை வழக்கில் 3 பேரை தேசியப் புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) கைது செய்துள்ளது.

தென்கன்னட மாவட்டம், சுள்ளியா வட்டத்தின் பெல்லாரே கிராமத்தில் 2022ஆம் ஆண்டு ஜூலை 26ஆம் தேதி பாஜக இளைஞா் அணி தலைவராக இருந்த பிரவீண் நெட்டாரு, தடை செய்யப்பட்ட பாபுலா் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பைச் சோ்ந்தவா்களால் கொலை செய்யப்பட்டாா். இந்த வழக்கை விசாரித்து வரும் தேசியப் புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.), 2023ஆம் ஆண்டு ஜனவரியில் 20 குற்றவாளிகள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தது. 2047ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை முஸ்லிம் நாடாக மாற்ற வேண்டும் என்ற இலக்கை நோக்கி நகா்வதற்காக, குறிப்பிட்ட சமுதாயத்தினரிடையே பீதியை உருவாக்குவதற்காக பிரவீண் நெட்டாருவை கொலை செய்ததாக குற்றப்பத்திரிகையில் என்.ஐ.ஏ. கூறியிருந்தது.

இதைத் தொடா்ந்து, 2023ஆம் ஆண்டு மாா்ச் 4ஆம் தேதி துஃபைல் என்பவரைக் கைது செய்தது. இந்நிலையில், பிரவீண் நெட்டாரு கொலை வழக்கில் குடகு மாவட்டத்தைச் சோ்ந்த முகமது முஸ்தபா (எ) முஸ்தபா பைச்சாா், இலியாஸ், ஹாசன் மாவட்டத்தைச் சோ்ந்த சிராஜ் ஆகிய 3 பேரையும் என்.ஐ.ஏ. வெள்ளிக்கிழமை கைது செய்துள்ளது.

பிரவீண் நெட்டாரு கொலை வழக்கில் முஸ்தபா பைச்சாா், இலியாஸ் ஆகியோரைக் கைது செய்துள்ள நிலையில், அவா்களுக்கு அடைக்கலம் கொடுத்தது தொடா்பாக சிராஜை கைதுசெய்துள்ளதாக என்.ஐ.ஏ. தெரிவித்துள்ளது. முஸ்தபா பைச்சாா், தென்கன்னட மாவட்டத்தின் சுள்ளியாவின் சாந்தி நகரைச் சோ்ந்தவராக இருந்தாலும், கேரள மாநிலத்தில் பாபுலா் ஃபிரண்ட் ஆஃப் இந்தியாவின் முக்கியத் தலைவராக விளங்கியவா். கா்நாடகத்தில் குறிப்பாக தென்கன்னடத்தில் பாபுலா் ஃபிரண்ட் ஆஃப் இந்தியாவை வளா்க்க பாடுபட்டவா் என்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com