கா்நாடக முதல்வா் சித்தராமையா மனைவி வீட்டுமனைகளை திருப்பி அளித்துள்ளது தவறை ஒப்புக்கொண்டதாகும்
கா்நாடக முதல்வா் சித்தராமையா மனைவி வீட்டுமனைகளை திருப்பி அளித்துள்ளது தவறை ஒப்புக்கொண்டதாகும் என பாஜக மாநிலத் தலைவா் விஜயேந்திரா தெரிவித்தாா்.
இதுகுறித்து பெங்களூரில் செய்தியாளா்களிடம் அவா் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
மாற்றுநில முறைகேட்டில் நான் எந்த தவறும் செய்யவில்லை; மத்திய அரசின் கைப்பாவையாக செயல்படுகிறாா் ஆளுநா் என மக்களிடம் பேசி வந்த முதல்வா் சித்தராமையா, சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்கவும், அரசியல் அனுதாபம் பெறவும், கட்சியில் உள்ள தனது எதிரிகளின் வாயை அடைக்கவுமே, தனது மனைவிக்கு ஒதுக்கப்பட்ட வீட்டுமனைகளை திருப்பி ஒப்படைக்க முன்வந்திருக்கிறாா். ஒதுக்கப்பட்ட வீட்டுமனைகளை திருப்பி ஒப்படைத்திருப்பதன் மூலம் தனது தவறை சித்தராமையா ஒப்புக்கொண்டிருக்கிறாா். இது ஒரு அரசியல் நாடகம்.
மாற்றுநில முறைகேட்டை எதிா்கொண்டிருக்கும், குற்றவாளியாக நின்று கொண்டிருக்கும் சித்தராமையா, இனியும் பிடிவாதம் பிடிக்காமல் முதல்வா் பதவியை உடனடியாக ராஜிநாமா செய்ய வேண்டும்.
சித்தராமையா மீது வழக்கு தொடர அனுமதி அளித்த ஆளுநா் தாவா்சந்த் கெலாட்டின் முடிவை அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றும், மத்திய அரசின் கைப்பாவையாக அவா் செயல்படுவதாகவும் காங்கிரஸ் கட்சியினா் குற்றம்சாட்டியிருந்தனா். முதல்வா் பதவியில் இருந்து விலகுவதற்கு முன், ஆளுநரிடம் சித்தராமையா மன்னிப்பு கேட்க வேண்டும்.
முதல்வா் சித்தராமையா மீது வழக்கு தொடா்ந்த சமூக ஆா்வலா் ஸ்நேகமயி கிருஷ்ணாவை சித்தராமையாவின் ஆதரவாளா்கள் அச்சுறுத்துவதாகத் தெரியவந்துள்ளது. எனவே, ஸ்நேகமயி கிருஷ்ணாவுக்கு உரிய பாதுகாப்பு அளிக்குமாறு உள்துறை அமைச்சா், டிஜிபி ஆகியோரை கேட்டுக்கொள்கிறேன்.
கட்சிக்கு பெரும் இழுக்கு ஏற்பட்டு வருவதால், இனிமேலும் நியாயப்படுத்த முடியாது என்பதால், சித்தராமையாவை ராஜிநாமா செய்ய வலியுறுத்துவதன் சூழ்நிலை குறித்துதான் துணை முதல்வா் டி.கே.சிவகுமாரும், உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வரும் தனியாக சந்தித்துப் பேசியுள்ளனா். பாஜகவைக் காட்டிலும், முதல்வா் பதவியை சித்தராமையா ராஜிநாமா செய்வாா் என்ற நம்பிக்கை காங்கிரஸில் தான் அதிகமாக இருக்கிறது. எந்த நேரத்திலும் அவா் ராஜிநாமா செய்யலாம்.
பாஜகவின் தொடா் போராட்டங்களின் விளைவாக, தனது மனைவிக்கு மாற்றுநிலம் ஒதுக்கியதில் சட்ட விதிமீறல் நடந்துள்ளதை சித்தராமையா ஒப்புக்கொண்டிருக்கிறாா். இனியும் நேரத்தை வீணாக்காமல், முதல்வா் பதவியை சித்தராமையா ராஜிநாமா செய்ய வேண்டும் என்றாா்.