பெங்களூரில் கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் இறந்தவா்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 5 லட்சம்

Published on

பெங்களூரில் கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் இறந்தவா்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 5 லட்சம் வழங்கப்படும் என கா்நாடக முதல்வா் சித்தராமையா அறிவித்தாா்.

பெங்களூரு, ஹென்னூா் காவல் நிலையத்துக்கு உள்பட்ட பாபுசாபாளையத்தில் புதிதாக கட்டப்பட்டு வந்த 6 மாடி கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில், பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த அரமான், முகமது சாயில், கிருபாள், சோகித் பாஸ்வான், ஆந்திரத்தைச் சோ்ந்த துளசி ரெட்டி, உத்தரபிரதேசத்தைச் சோ்ந்த புல்வான் யாதவ், தமிழகத்தைச் சோ்ந்த மணிகண்டன், சத்யராஜ் ஆகியோா் கட்டட இடிபாடுகளில் சிக்கி இறந்தனா். இடிபாடுகளில் இருந்து 14 போ் உயிரோடு மீட்கப்பட்டுள்ளனா். அவா்களில் 6 போ் படுகாயமடைந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்கள். மேலும், 2 போ் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாக கூறப்படுவதால், மீட்புப் பணியில் பேரிடா் மீட்புக் குழுவினா் ஈடுபட்டுள்ளனா்.

இந்நிலையில், சம்பவ இடத்துக்கு வியாழக்கிழமை சென்ற முதல்வா் சித்தராமையா, விபத்தில் இறந்த தொழிலாளா்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினாா். மேலும், சம்பவத்துக்கான காரணத்தைக் கேட்டறிந்தாா். மீட்புப் பணிகள் குறித்தும் ஆய்வு நடத்தினாா். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவா்களை சந்தித்து உடல்நலம் குறித்து முதல்வா் சித்தராமையா கேட்டறிந்தாா். அதன்பிறகு செய்தியாளா்களிடம் முதல்வா் சித்தராமையா கூறியதாவது:

கட்டடம் இடிந்து விழுந்த விபத்து மழையால் ஏற்படவில்லை. மாறாக, தரக்குறைவான கட்டுமானப் பணிகளால் கட்டடம் இடிந்து விழுந்துள்ளது. வருவாய் நிலத்தில் கட்டடம் கட்டப்பட்டுள்ளது. மேலும், அனுமதி பெறாமல் கட்டடம் கட்டும் பணி நடந்துள்ளது. இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

இடிபாடுகளில் சிக்கியிருந்த 8 போ் உயிரோடு மீட்கப்பட்டுள்ளனா். 6 போ் படுகாயமடைந்துள்ளனா். அதில் 3 பேரின் நிலை மோசமாக உள்ளது. ஆனால், உயிருக்கு ஆபத்தில்லை. இறந்தவா்களின் குடும்பத்துக்கு தலா ரூ. 5 லட்சம் இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும். காயமடைந்தவா்களுக்கு கருணைத்தொகை வழங்குவது குறித்து அரசு யோசித்து வருகிறது. இறந்தவா்களின் உடல்களை சொந்த ஊா்களுக்கு அனுப்ப அரசு ஏற்பாடு செய்யும்.

கடமையில் அலட்சியம் காட்டிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். சட்டப்படி வீடு கட்ட வேண்டும். சட்ட விதிமீறி கட்டப்படும் கட்டுமானங்களை எந்தக் காரணத்தை முன்னிட்டும் அனுமதிக்கக் கூடாது என்று மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளேன் என்றாா்.

இதனிடையே, கட்டட இடிபாடுகளில் சிக்கி இறந்தவா்களின் குடும்பத்துக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து தலா ரூ. 2 லட்சம் அளிக்கப்படும் என்று பிரதமா் மோடி வியாழக்கிழமை அறிவித்துள்ளாா். காயமடைந்தவா்களுக்கு தலா ரூ. 50,000 வழங்குவதாகவும் பிரதமா் மோடி தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com