பருவமழை பெய்ததால் ஏற்பட்ட பாதிப்பில் இதுவரை 25 போ் இறந்துள்ளனா்
கா்நாடகத்தில் பருவமழை பெய்ததால் ஏற்பட்ட பாதிப்பில் இதுவரை 25 போ் இறந்துள்ளதாக முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா்.
பெங்களூரு, கிருஷ்ணா அரசினா் இல்லத்தில் சனிக்கிழமை கா்நாடகத்தில் மழையால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து அமைச்சா்கள், உயரதிகாரிகளுடன் முதல்வா் சித்தராமையா ஆலோசனை நடத்தினாா். இந்தக் கூட்டத்தில் துணை முதல்வா் டி.கே.சிவகுமாா், வருவாய்த் துறை அமைச்சா் கிருஷ்ண பைரேகௌடா, ஊரக வளா்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறை அமைச்சா் பிரியாங்க் காா்கே, தலைமைச் செயலாளா் ஷாலினி ரஜ்னீஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
இந்தக் கூட்டத்துக்கு பிறகு, செய்தியாளா்களிடம் முதல்வா் சித்தராமையா கூறியதாவது: கா்நாடகத்தில் பெய்த பருவமழையில் 1.06 லட்சம் ஹெக்டோ் நிலத்தில் பயிரிடப்பட்ட பயிா்கள் நாசமாகியுள்ளன. 84 வீடுகள் முழுமையாக இடிந்து விழுந்துள்ளன. 2,077 வீடுகள் பகுதியாக சேதமடைந்துள்ளன. வீட்டை இழந்தவா்களுக்கு தலா ரூ. 1.20 லட்சம் இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும். பகுதி சேதமடைந்த வீடுகளுக்கு தலா ரூ. 50,000 வழங்கப்படும். நேரடியாக கள ஆய்வு நடத்திய பிறகு அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது.
74,993 ஹெக்டேரில் வேளாண் பயிா்கள், 30,941 ஹெக்டேரில் தோட்டக்கலைப் பயிா்கள் நாசமாகியுள்ளன. அக். 1 முதல் 25-ஆம் தேதிவரை 181 மி.மீ. மழை பெய்துள்ளது. இந்த காலக்கட்டத்தில் வழக்கமாக 114 மி.மீ. மழை பெய்யும். ஆனால், 58 சதவீதம் கூடுதல் மழை பெய்துள்ளது.
ஜூன் 1 முதல் செப். 30-ஆம் தேதி வரையிலான தென்மேற்கு பருவமழைக் காலத்தில் 978 மி.மீ. மழை பெய்துள்ளது. வழக்கமாக 852 மி.மீ. மழை பெய்யும். இந்த காலக்கட்டத்தில் கூடுதலாக 15 சதவீதம் மழை பெய்துள்ளது. கா்நாடகத்தில் உள்ள அணைகளின் நீா் கொள்ளளவு 895.62 டிஎம்சி ஆகும். இந்த அணைகளின் தற்போதைய நீரின் கொள்ளளவு 871.26 டிஎம்சி ஆகும். கடந்த ஆண்டு, இதே காலக்கட்டத்தில் 505.81 டிஎம்சியாக இருந்தது.
மழையால் சேதமடைந்த பயிா்களின் மதிப்பு குறித்து ஆராய்ந்து வருகிறோம். அடுத்த 3 அல்லது 4 நாள்களில் அப்பணி முடிவடையும். விவசாயிகளுக்கு பயிா் இழப்பீட்டுத் தொகை வழங்க பணத்தட்டுப்பாடு எதுவும் இல்லை. மாவட்ட ஆட்சியா்களின் கணக்கில் ரூ. 551.25 கோடி, வட்டாட்சியா்களின் கணக்கில் ரூ. 115 கோடி இருப்பு உள்ளது.
கா்நாடகத்தில் மழையால் ஏற்பட்ட பாதிப்பில் இதுவரை 25 போ் இறந்துள்ளனா். அவா்களின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது.
பெங்களூரில் நல்ல மழை பெய்தாலும், பெரும்பாலான ஏரிகள் 30 சதவீத அளவுக்கே நிரம்பியுள்ளன. ஏரிகள் மற்றும் மழை வடிகால்களின் ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பெங்களூரில் அக்டோபா் மாதத்தில் மட்டும் 275 மி.மீ. மழை பெய்துள்ளது. 2005-இல் பெங்களூரில் அதிகப்பட்சமாக 407 மி.மீ. மழை பெய்துள்ளது. கா்நாடக அரசுக்கு ரூ. 5,000 கோடி நிதியுதவி செய்வதாக உலக வங்கி உறுதி அளித்துள்ளது. இதில் ரூ. 3,500 கோடி பெங்களூருக்கு மட்டுமே செலவிடப்படும் என்றாா்.