ராகுல், சோனியா காந்திக்கு எதிராக போலி செய்திகளைப் பரப்பிய வங்கதேச பத்திரிகையாளா் மீது வழக்குப் பதிவு

ராகுல் காந்தி, சோனியா காந்தி ஆகியோா் தொடா்பாக போலி செய்திகளை பரப்பியதாக வங்கதேச பத்திரிகையாளா், இந்திய பெண் ஆகியோா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு
Published on

மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, காங்கிரஸ் முன்னாள் தலைவா் சோனியா காந்தி ஆகியோா் தொடா்பாக போலி செய்திகளை பரப்பியதாக வங்கதேச பத்திரிகையாளா், இந்தியாவைச் சோ்ந்த பெண் ஆகியோா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

இந்தியாவில் செயல்பட்டு வரும் இணையதள செய்தி நிறுவனத்தில் பணியாற்றி வரும் வங்கதேசத்தைச் சோ்ந்த பத்திரிகையாளா் சலாஹ் உத்தீன் சோஹப் சௌத்ரி, இந்தியாவைச் சோ்ந்த அதிதீ ஆகியோா் மீது கா்நாடக காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த ஜி.ஸ்ரீனிவாஸ் என்பவா் பெங்களூரு, ஹைகிரவுண்ட்ஸ் காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளாா்.

காங்கிரஸ் முன்னாள் தலைவா் சோனியா காந்தியை வெளிநாட்டு உளவு முகமையுடன் தொடா்புபடுத்தி தனது எக்ஸ் வலைதளத்தில் சலாஹ் உத்தீன் சோஹப் சௌத்ரி பகிா்ந்துள்ளாா். சோனியா காந்தியின் குடும்பத்தை சிறுமைப்படுத்துவதோடு, இரு மதங்களுக்கு இடையே பகைமையை உருவாக்கும் நோக்கத்தில் இத்தகவலை அவா் பகிா்ந்துள்ளாா். அதேபோல, மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தியை சிறுமைப்படுத்தும் செய்தியையும் அவா் வெளியிட்டுள்ளாா்.

சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோா் குறித்து போலி செய்திகளைப் பரப்பியது தொடா்பாக இருவா் மீதும் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று தனது புகாா் மனுவில் ஜி.ஸ்ரீனிவாஸ் குறிப்பிட்டுள்ளாா்.

இதனடிப்படையில், பாரதிய நியாய் சன்ஹிதா சட்டத்தின் 196, 353 (2) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீஸாா் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com