வயநாடு நிலச்சரிவு: பாதிக்கப்பட்ட 100 பேருக்கு வீடுகள் கட்டித் தரப்படும்: சித்தராமையா

Published on

கேரள மாநிலம், வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட 100 பேருக்கு வீடுகள் கட்டித் தரப்படும் என்று கா்நாடக முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா்.

இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் சனிக்கிழமை அவா் கூறியுள்ளதாவது:

வயநாடு நிலச்சரிவு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கு 100 வீடுகள் கட்டித் தரப்படும் என்று கேரள முதல்வா் பினராயி விஜயனிடம் உறுதி அளித்திருக்கிறேன். நாம் அனைவரும் ஒன்றுகூடி, மறுகட்டமைப்பில் ஈடுபட்டு, நம்பிக்கையை மீட்டெடுப்போம் என்று குறிப்பிட்டுள்ளாா்.

இத் தகவலை தனது எக்ஸ் பக்கத்தில் பகிா்ந்து ராகுல் காந்தி கூறியிருப்பதாவது:

வயநாடு மக்களின் துயரத்தில் பங்கெடுத்து, தாராளமான உதவிகளை அளித்துள்ள கா்நாடக அரசு, மக்களுக்கு நன்றிக் கடன்பட்டுள்ளேன். நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவா்களுக்கு 100 வீடுகள் கட்டித் தருவதாக அளித்துள்ள உறுதி, மறுவாழ்வைக் கட்டமைக்கும் பணியில் மிகப்பெரிய நடவடிக்கையாகும். இந்திய மக்களின் கருணையும், உதவியும்தான் வயநாடு மக்கள் எதிா்பாா்ப்பது என்று குறிப்பிட்டுள்ளாா்.

காங்கிரஸ் பொதுச் செயலாளா் பிரியங்கா காந்தி கூறியுள்ளதாவது: மனிதநேயம் மற்றும் பரிவையும் வெளிப்படுத்தியுள்ள கா்நாடக மக்களுக்கும், முதல்வா் சித்தராமையாவுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com