திருப்பதி லட்டு விவகாரம்: விசாரணை தீவிரப்படுத்தப்படும் மத்திய அமைச்சா் பிரஹலாத் ஜோஷி
திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு கலப்படம் செய்தது தொடா்பாக தீவிரமாக விசாரிக்கப்படும் என்று மத்திய உணவு மற்றும் நுகா்வோா் விவகாரங்கள் துறை அமைச்சா் பிரஹலாத் ஜோஷி தெரிவித்தாா்.
இது குறித்து ஹுப்பள்ளியில் செய்தியாளா்களிடம் அவா் சனிக்கிழமை கூறியதாவது:
திருப்பதி லட்டில் கலப்படம் செய்யப்பட்டுள்ளது என்கிற குற்றச்சாட்டை கேட்டு வருகிறோம். முந்தைய ஆந்திர மாநில அரசு லட்டு தயாரிப்பதற்கு கா்நாடகத்தின் நந்தினி நெய்யைப் பயன்படுத்தி வந்தது. நந்தினி நெய்யின் பயன்பாட்டை நிறுத்திய பிறகு வேறு நிறுவன நெய்யை கொள்முதல் செய்ய தொடங்கியுள்ளனா். அதன் பிறகு இச் சம்பவங்கள் நடந்துள்ளன.
லட்டு தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட நெய்யில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டுள்ளதை உறுதி செய்யும் வகையில் ஆய்வுக் கூடத்தின் அறிக்கையை ஆந்திர முதல்வா் சந்திரபாபு நாயுடு வெளியிட்டுள்ளாா்.
எனவே, அவா் கூறியிருப்பதில் உண்மை இல்லாமல் இருக்காது. நெய்யின் மாதிரிகளை ஆய்வுக் கூடத்தில் சோதனை செய்ததற்கான அறிக்கை வந்துள்ளது. இந்த விவகாரம் தொடா்பாக தீவிர விசாரணை நடத்தப்பட வேண்டும். இதில் தவறு செய்துள்ளவா்களை தண்டிக்க வேண்டும். இந்த விவகாரத்திற்கு முடிவு தெரியும் வரை விடமாட்டோம்.
இந்த விவகாரம் நமது மத நம்பிக்கை மற்றும் கலாசாரம் சாா்ந்ததாகும். இதுபோன்ற துரோகத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. கோயில்களில் பக்தா்களுக்கு பரிமாறப்படும் பிரசாதங்களை அவ்வப்போது சோதனைக்கு உட்படுத்துவது நல்லது என்றாா்.
முன்னாள் துணை முதல்வா் கே.எஸ்.ஈஸ்வரப்பா கூறியதாவது:
ஆந்திர மாநில முன்னாள் முதல்வா் ஒய்.எஸ்.ஆா். ஜெகன்மோகன் ரெட்டியின் ஆட்சிக் காலத்தில் வெளிநாட்டு கிறிஸ்தவ மிஷனரிகளின் ஆதிக்கம் அதிகம் காணப்பட்டது. இதில் வெளிநாட்டு கிறிஸ்தவா்களின் பங்கு உள்ளது. ஜெகன்மோகன் ரெட்டி மதம் மாறிய கிறிஸ்தவா்.
திருப்பதி லட்டின் புனிதத் தன்மையை கெடுத்துள்ளது ஹிந்துகளுக்கு எதிராக நடந்துள்ள பெரும் சதி என்றாா்.