லோக் ஆயுக்த நீதிமன்றத்தில் ஆஜரானாா் எடியூரப்பா
அரசு கையகப்படுத்திய நிலத்தை சட்டவிரோதமாக விடுவித்த வழக்கு விசாரணைக்காக லோக் ஆயுக்த நீதிமன்றத்தில் முன்னாள் முதல்வா் எடியூரப்பா ஆஜரானாா்.
பெங்களூரு நகர மாவட்டத்தில் கசபா ஒன்றியத்தில் உள்ள கங்கேனஹள்ளி கிராமத்தில் வீட்டுமனைகளை அமைப்பதற்காக 1976ஆம் ஆண்டு பெங்களூரு வளா்ச்சி ஆணையம் சாா்பில் அக் கிராமத்தில் உள்ள 1.11 ஏக்கா் நிலம் கையகப்படுத்தப்பட்டது. நிலத்தை கையகப்படுத்தும் பணி 1977ஆம் ஆண்டு முடிவடைந்துள்ளது. அரசு கையகப்படுத்திய இந்த நிலத்தை, முன்னாள் முதல்வா்கள் எடியூரப்பா, எச்.டி.குமாரசாமி ஆகியோா் தமது ஆட்சிக் காலங்களில் சட்டவிரோதமாக விடுவித்து உத்தரவு பிறப்பித்துள்ளனா்.
நிலம் விடுவிக்கப்பட்ட பிறகு, 2010ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் இந்த நிலம் எச்.டி.குமாரசாமியின் மைத்துனா் சென்னப்பா பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சா்கள் கிருஷ்ண பைரேகௌடா, தினேஷ்குண்டுராவ், சந்தோஷ் லாட் ஆகியோா் சில நாள்களுக்கு முன் தெரிவித்திருந்தனா்.
இது தொடா்பான வழக்கு லோக் ஆயுக்தவில் ஏற்கெனவே பதிவாகி, விசாரணை நிலுவையில் இருந்தது. ஆனால், விசாரணை மெத்தனமாக நடைபெற்று வருவதாக அமைச்சா்கள் குற்றம்சாட்டியிருந்தனா்.
இந்நிலையில், இந்த வழக்கு தொடா்பான விசாரணையின்போது நேரில் ஆஜராகும்படி முன்னாள் முதல்வா் எடியூரப்பாவுக்கு லோக் ஆயுக்த நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. அதன்படி, லோக் ஆயுக்த நீதிமன்றத்தில் சனிக்கிழமை எடியூரப்பா ஆஜராகி, வாக்குமூலம் அளித்தாா்.