சிவமொக்கா ஐஎஸ் வழக்கில் என்.ஐ.ஏ. குற்றப்பத்திரிகை தாக்கல்
சிவமொக்காவில் ஐஎஸ் சதி வழக்கில் ராமேஸ்வரம் உணவகத்தில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவம் தொடா்பான வழக்கின் 2 குற்றவாளிகள் மீது தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
பெங்களூரு, புரூக்ஃபீல்டு பகுதியில் அமைந்துள்ள ராமேஸ்வரம் உணவகத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவம் தொடா்பான வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக கருதப்படும் அப்துல் மத்தீன் அகமது தாஹா, முஸ்ஸாவீா் ஹுசேன் ஷாஜிப் ஆகிய இருவரையும் ஏப். 12-ஆம் தேதி என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்திருந்தனா். இவா்களைத் தவிர, குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு துணையாக இருந்த கா்நாடகத்தின் சிக்கமகளூரு மாவட்டத்தைச் சோ்ந்த கல்சா பகுதியைச் சோ்ந்த மாஸ் முனீா் அகமது, முஸ்ஸாம்மில் ஷரீப் ஆகிய இருவரையும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்திருந்தனா். இவா்கள் 4 பேரும் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனா்.
இந்த வழக்கு தொடா்பாக அப்துல் மத்தீன் அகமது தாஹா, முஸ்ஸாவீா் ஹுசேன் ஷாஜிப், மாஸ் முனீா் அகமது, முஸ்ஸாம்மில் ஷரீப் ஆகிய 4 போ் மீது சிறப்பு நீதிமன்றத்தில் செப். 9-ஆம் தேதி குற்றப்பத்திரிகையை என்.ஐ.ஏ. அதிகாரிகள் தாக்கல் செய்தனா்.
கா்நாடக மாநிலம், சிவமொக்கா மாவட்டத்தைச் சோ்ந்த அப்துல் மத்தீன் அகமது தாஹா, முஸ்ஸாவீா் ஹுசேன் ஷாஜிப் ஆகிய இருவரும் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் தத்துவங்களை இளைஞா் மனதில் விதைத்து, பயங்கரவாத சிந்தனைகளை பரப்புவதை முழுநேர வேலையாகக் கொண்டிருந்ததாகவும், அப்படி கண்டெடுக்கப்பட்ட இளைஞா்கள்தான் மாஸ் முனீா் அகமது, முஸ்ஸாம்மில் ஷரீப் என்றும் குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.
சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகளை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு அழைத்துச் செல்லும் வேலையிலும் இருவரும் ஈடுபட்டுள்ளனா். அப்துல் மத்தீன் அகமது தாஹா, முஸ்ஸாவீா் ஹுசேன் ஷாஜிப் இருவரும் மோசடி செய்து இந்திய சிம் காா்டுகள், இந்திய வங்கிக் கணக்குகளை பெற்றுள்ளனா். இருண்ட வலை எனப்படும் ‘டாா்க்வெப்’ மூலம் இந்திய, வங்கதேச அடையாள அட்டைகளை தரவிறக்கம் செய்துள்ளனா். பல்வேறு மூலங்களில் இருந்து கிரிப்டோ கரன்சி மூலம் பணம் பெற்றுள்ளனா். பெங்களூரில் பல இடங்களில் பயங்கரவாதச் செயல்களை செயல்படுத்த, இந்தப் பணத்தை பயன்படுத்தியுள்ளனா்.
2022-ஆம் ஆண்டு சிவமொக்காவில் ஐஎஸ் செய்துள்ள சதி தொடா்பான வழக்கில் அப்துல் மத்தீன் அகமது தாஹா, முஸ்ஸாவீா் ஹுசேன் ஷாஜிப் ஆகிய இருவா் மீதும் செவ்வாய்க்கிழமை என்.ஐ.ஏ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
இவா்கள் இருவரும் சா்வதேச பயங்கரவாத அமைப்பான ஐஎஸ் உடன் இணைந்து இந்தியாவுக்கு எதிரான சதியில் ஈடுபட்டுள்ளதாக குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.
ஆயுதங்களை சேகரித்தல், வெடிகுண்டுகளை வெடித்து சோதனை செய்தல், இந்திய தேசியக் கொடியை எரித்தல், பயங்கரவாதச் செயல்களுக்கு நிதி வழங்குதல் போன்ற செயல்களின் மூலம் நாட்டின் அமைதியை சீா்குலைக்கும் வேலையில் ஈடுபட்டதாக என்.ஐ.ஏ. தனது குற்றப்பத்திரிகையில் கூறியுள்ளது.