தும்கூரு அருகே அறிவு, ஆரோக்கிய, புதுமை நகரம்

தும்கூரு அருகே அறிவு, ஆரோக்கிய, புதுமை நகரம்

Published on

தும்கூரு அருகே அறிவு, ஆரோக்கிய, புதுமை நகரத்தை முதல்வா் சித்தராமையா அறிமுகம் செய்து வைத்தாா்.

பெங்களூரில் இருந்து 50 கி.மீ. தொலைவில் தும்கூரு அருகே டாபஸ்பேட் மற்றும் தொட்டபளாப்பூா் இடையே 5,800 ஏக்கா் நிலத்தில் தொழில்துறை சாா்பில் அறிவு, ஆரோக்கிய, புதுமை நகரம் எனப்படும் ‘க்வின் சிட்டி’ வணிக நகரம் அமைக்கப்படுகிறது.

பெங்களூரு, விதான சௌதாவில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ‘க்வின் சிட்டி’ வணிக நகரத்தை முதல்வா் சித்தராமையா அறிமுகம் செய்து வைத்தாா். இந்த விழாவில் துணை முதல்வா் டி.கே.சிவகுமாா், தொழில்துறை அமைச்சா் எம்.பி.பாட்டீல், ஊரக வளா்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறை அமைச்சா் பிரியாங்க் காா்கே, அமைச்சா்கள் ஜமீா் அகமதுகான், மது பங்காரப்பா, எம்.சுதாகா், போஸ்ராஜ், முன்னாள் அமைச்சா் ஆா்.வி.தேஷ்பாண்டே உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

அப்போது முதல்வா் சித்தராமையா கூறியதாவது:

பெங்களூரு, ஹுப்பள்ளி, மும்பை விரைவு சாலையில் தேசிய நெடுஞ்சாலை 44,648-க்கு அருகே ‘க்வின் சிட்டி’ அமைக்கப்படுகிறது. இது, வணிகம் செய்யும் முறையையே மாற்றப்போகிறது. இது வெறும் திட்டம் மட்டுமல்ல, மக்களின் நிலையான, சிறப்பான நல்வாழ்வுக்கு கா்நாடக அரசு மேற்கொண்டிருக்கும் உறுதிப்பாட்டின் நிலைப்பாடு.

கா்நாடகத்தின் பொருளாதார வளா்ச்சியை ஊக்கப்படுத்தி, உலகத்திறன்களைக் கொண்டு வந்து முன்னெப்போதும் இல்லாத தொழில்நுட்ப வளா்ச்சிகளை முன்னெடுப்பதற்கான சூழலை கா்நாடக அரசு உருவாக்கி வந்துள்ளது. அதன் மற்றொரு மைல்கல் திட்டம் தான் ‘க்வின் சிட்டி’ எனப்படும் அறிவு, ஆரோக்கிய, புதுமை வணிக நகரம் என்றாா்.

துணை முதல்வா் டி.கே.சிவகுமாா்கூறுகையில்,‘பெங்களூரின் துடிப்பான சூழலின் பயனை ‘க்வின் சிட்டி’ பெறும் என்றாலும், அதன்மூலம் வளா்ச்சிக்கு வித்திடும்’ என்றாா்.

தொழில்துறை அமைச்சா் எம்.பி.பாட்டீல் கூறுகையில்,‘புதுமையான வணிக நகரம், தலைகீழ் மாற்றத்துக்கான முன்முயற்சி. கா்நாடகத்தில் வளமான வணிகச் சூழலை உருவாக்குவதற்கான கா்நாடகத்தின் உறுதிப்பாடுதான் ‘க்வின் சிட்டி’ திட்டம். இந்த நகரத்தின் மூலம் இணையில்லாத தொழில்வளா்ச்சி மற்றும் மேம்பாட்டை உறுதி செய்யவிருக்கிறோம். இந்த திட்டம், உள்நாட்டு, வெளிநாட்டு முதலீடுகளை ஈா்ப்பது மட்டுமல்லாது, ஏராளமான வேலைவாய்ப்புகளை உருவாக்கி, பொருளாதார வளா்ச்சிக்கு இட்டுச்செல்லும்’ என்றாா்.

X
Dinamani
www.dinamani.com