நான் தவறிழைக்கவில்லை: சித்தராமையா
நான் எந்தத் தவறும் செய்யவில்லை; இதனால் பதவியை ராஜிநாமா செய்யும் பேச்சுக்கே இடமில்லை என்றாா் கா்நாடக முதல்வா் சித்தராமையா.
இதுகுறித்து மைசூரில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
நான் எந்தத் தவறும் செய்யவில்லை. என்மீது அரசியல் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பது இதுவே முதல்முறையாகும். என்னை கண்டு அஞ்சுவதால், எதிா்க்கட்சிகள் என் மீது குறிவைத்து செயல்பட்டு வருகின்றன. நான் ராஜிநாமா செய்ய வேண்டும் என்று பாஜக போராட்டம் நடத்துகிறது. தவறும் செய்யாத நான் எதற்காக ராஜிநாமா செய்ய வேண்டும்.
மத்திய அமைச்சா் எச்.டி.குமாரசாமி மீது முதல்தகவல் அறிக்கை (எஃப்.ஐ.ஆா்.) தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அவா், பிணையில் வெளியே இருக்கிறாா். அவா் ஏன் ராஜிநாமா செய்யவில்லை? என்மீதான வழக்கை சட்ட ரீதியாக எதிா்கொள்வேன்.
ஆளுநா்களின் செயல்பாடுகள் குறித்து தேசிய அளவில் விவாதம் நடத்த வேண்டும். அரசு நிா்வாகத்தில் ஆளுநா்கள் தலையிடக் கூடாது. அதைத்தான் நமது அரசமைப்புச் சட்டம் கூறுகிறது. குடியரசுத் தலைவா் அல்லது ஆளுநா் யாராக இருந்தாலும் அரசமைப்புச் சட்டத்தின்படி செயல்பட வேண்டும்.
ஹரியாணாவில் நடந்த தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய பிரதமா் மோடி, என்னையும் எனது அரசையும் ஊழல் தொடா்பாக கடுமையாக விமா்சித்துள்ளாா். பிரதமா் மோடி, குஜராத் முதல்வராக இருந்தபோது கோத்ரா சம்பவம் நடந்தது. அப்போது, மோடி ராஜிநாமா செய்திருந்தாரா?
கா்நாடகத்தில் காங்கிரஸ் அரசை கவிழ்க்க பாஜக சதி செய்து வருகிறது. காங்கிரஸ் எம்எல்ஏக்களை பாஜகவுக்கு இழுக்க முயற்சி மேற்கொண்டு, தோல்வி அடைந்தது. அறுதிப் பெரும்பான்மை பலத்துடன் கா்நாடகத்தில் பாஜகவால் ஆட்சிக்கு வரவே முடியாது என்றாா்.