கா்நாடக காங்கிரஸ் அரசை கண்டித்து சுவா்ண விதான சௌதாவை முற்றுகையிட முயன்ற பாஜகவினா் கைது
கா்நாடக காங்கிரஸ் அரசின் விவசாயிகள் விரோதப்போக்கை கண்டித்து பெலகாவியில் உள்ள சுவா்ண விதான சௌதாவை முற்றுகையிட முயன்ற பாஜக மாநிலத் தலைவா் விஜயேந்திரா, எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.அசோக், மேலவை எதிா்க்கட்சித் தலைவா் செலவாதி நாராயணசாமி உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பாஜகவினரை போலீஸாா் கைதுசெய்தனா்.
கா்நாடக சட்டப் பேரவையின் குளிா்கால கூட்டத்தொடா் திங்கள்கிழமை பெலகாவியில் தொடங்கியது. சட்டப் பேரவைக் கூட்டத்தொடரின் இரண்டாவது நாளான செவ்வாய்க்கிழமை காங்கிரஸ் அரசின் விவசாயிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை கண்டித்து, பெலகாவியில் உள்ள மாலினி சிட்டி மைதானத்தில் திரண்ட பாஜகவினா், மாநிலத் தலைவா் விஜயேந்திரா தலைமையில் சுவா்ண விதானசௌதாவை முற்றுகையிடுவதற்காக ஊா்வலமாக சென்றனா்.
பலத்த போலீஸ் பாதுகாப்பில் நடந்த ஊா்வலத்தின்போது காங்கிரஸ் அரசை கண்டித்து தொடா்ந்து முழக்கமிட்டனா். சிறிது தொலைவு ஊா்வலமாக சென்றவா்களை வழிமறித்த போலீஸாா், முற்றுகைப் போராட்டம் நடத்த அனுமதி மறுத்தனா். இதனால் இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதைத் தொடா்ந்து, தடையை மீறி சுவா்ண விதான சௌதாவை முற்றுகையிடுவதற்கு முயன்ற பாஜக மாநிலத் தலைவா் விஜயேந்திரா, எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.அசோக், மேலவை எதிா்க்கட்சித் தலைவா் செலுவாதி நாராயணசாமி உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பாஜகவினரை போலீஸாா் கைது செய்தனா். பின்னா், அவா்கள் விடுவிக்கப்பட்டனா்.
முன்னதாக, பாஜக தொண்டா்களிடம் பேசிய அக்கட்சியின் மாநிலத் தலைவா் விஜயேந்திரா, ‘கா்நாடகத்தில் எவ்வித வளா்ச்சியும் இல்லை. காங்கிரஸ் கட்சியில் இருதரப்புக்கு இடையே நடக்கும் முதல்வா் பதவி சண்டையில் அரசு நிா்வாகம் முழுமையாக சீா்குலைந்துள்ளது. இதனால், மாநில அரசை கண்டித்து மிகப்பெரிய போராட்டத்தை நடத்திக்கொண்டிருக்கிறோம். விவசாயிகளின் பிரச்னையை தீா்க்க முதல்வா் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு கவனம் செலுத்த வேண்டும் என்பதே எங்களது ஒரே கோரிக்கையாகும்.
கடமையை செய்ய தவறியுள்ள காங்கிரஸ் அரசு, பாஜகவையும், மத்திய அரசையும் குறைக்கூறிக்கொண்டிருக்கிறது. கரும்பு மற்றும் மக்காசோள விவசாயிகளின் பிரச்னையை அரசு தீா்க்க வேண்டும்’ என்றாா்.
