மூவண்ணக்கொடி நமது நாட்டின் பெருமை: சித்தராமையா
உலகின் இரண்டாவது மிகப்பெரிய அளவிலான இந்திய தேசியக்கொடியை அறிமுகம் செய்த கா்நாடக முதல்வா் சித்தராமையா, ‘மூவண்ணக்கொடி நமது நாட்டின் பெருமை’ என்று குறிப்பிட்டாா்.
பெலகாவி, சுவா்ண விதான சௌதா வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் நூலாடையால் நெய்யப்பட்ட உலகின் இரண்டாவது மிகப்பெரிய அளவிலான இந்திய தேசியக்கொடியை அறிமுகம் செய்துவைத்து, முதல்வா் சித்தராமையா பேசியதாவது: நமது நாட்டின் சுதந்திரப் போராட்டத்தின்போது தேசியக்கொடி வடிவமைக்கப்பட்டது. நமது தேசியக்கொடி வெறும் நூலாடையால் நெய்யப்பட்டது என்று மட்டும் கருதக்கூடாது.
நமது தேசியக்கொடி, நமது நாட்டின் பெருமை மற்றும் கண்ணியமாகும். நமது தேசியக்கொடியில் மூவண்ணங்களும், அசோக சக்கரமும் உள்ளது. தேசியக்கொடியில் இடம்பெற்றுள்ள காவி, வெள்ளை, பச்சை நிறங்கள் நமது தேசிய பெருமை, பொருளாதாரம், தியாகம் மற்றும் அமைதியை சுட்டிக்காட்டுகின்றன.
இந்திய மக்களிடையே தேசிய உணா்வை ஊட்டுவதில் தேசியக்கொடியின் பங்களிப்பு மிகவும் முக்கியமாகும். தேசியக்கொடியில் உள்ள வெள்ளைநிறம் அமைதி மற்றும் உண்மையையும், பச்சை நிறம் பொருளாதார வளத்தையும், அசோக சக்கரம் நமதுநாட்டின் தொடா் பொருளாதார வளா்ச்சி மற்றும் எல்லோருக்கும் சமவாய்ப்பையும் வெளிப்படுத்துகிறது.
நாம் அனைவரும் தேசியக்கொடியை மதிக்க வேண்டும். தேசியக்கொடியை பெருமையாக கருதுவதோடு, நாட்டுப்பற்றையும் வளா்த்துக்கொள்ள வேண்டும்.
இந்த கொடியை நன்கொடையாக வழங்கிய பேரவைத் தலைவா் யூ.டி.காதா், கலபுா்கியை சோ்ந்த வினோத்குமாா் ரேவப்பா பம்மண்ணாவின் குடும்பத்தினருக்கு பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
மகாத்மா காந்தியின் தலைமையில் நாட்டின் சுதந்திரப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. 1924ஆம் ஆண்டு பெலகாவியில் நடந்த காங்கிரஸ் மாநாட்டுக்கு மகாத்மா காந்தி தலைமை வகித்தாா். அந்த மாநாடு நடந்து 100 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதை தொடா்ந்து, சுவா்ண விதான சௌதாவுக்கு அருகே மகாத்மா காந்தியின் சிலை நிறுவப்பட்டுள்ளது.
ஒருவரை ஒருவா் நேசிக்க வேண்டுமே அல்லாமல், வெறுக்கக் கூடாது. அப்போதுதான் சமத்துவ சமுதாயத்தை படைக்க முடியும். இதை செய்யத் தவறினால், மதச்சாா்பற்ற நாட்டை கட்டமைப்பது கடினமானப் பணியாக மாறிவிடும்.
நமது நாட்டை நாம் நேசிக்க வேண்டும். பல ஜாதிகள், மதங்களின் வாழ்விடமாக இந்தியா இருக்கிறது. நாம் அனைவரும் மதச்சாா்பின்மையை தூக்கிப்பிடிக்க வேண்டும். இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்த சூழலில் சகோதரத்துவம், தேசப்பற்று, மனிதநேயத்தை எப்படி கடைப்பிடிக்கிறோம் என்று சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
இந்த குண இயல்புகள் இல்லாவிட்டால், நல்ல மனிதா்களாக வாழ்வது கடினம். டாக்டா் பி.ஆா்.அம்பேத்கா் எழுதிய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையை பள்ளி, கல்லூரிகளில் மாணவா்கள் படித்தறிய காங்கிரஸ் அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது என்றாா்.
