கா்நாடக முதல்வரை மாற்றும் எந்த அறிகுறியும் காங்கிரஸ் கட்சியில் இல்லை என கா்நாடக உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வா் தெரிவித்தாா்.
இதுகுறித்து பெங்களூரில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
நிகழாண்டில் நவ. 15 அல்லது 16-ஆம் தேதி முதல்வா் சித்தராமையா மாற்றப்படுவாா் என எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.அசோக் கூறியிருக்கிறாா். முதல்வரை மாற்றுவதற்கான எந்த அறிகுறியும் காங்கிரஸ் கட்சியில் தென்படவில்லை.
பெங்களூரில் இரண்டாவது விமான நிலையம் அமைப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. ஆனால், எந்த இடம் என்பது முடிவாகவில்லை. தும்கூரில் இரண்டாவது விமான நிலையத்தை அமைக்க வேண்டுமென்பது எங்கள் மாவட்ட மக்களின் விருப்பம். ஆனால், ஒரு சிலா் பிடதியை பரிந்துரைத்திருக்கிறாா்கள். எது சாதகமான இடம் என்பதை விமானத் துறை முடிவு செய்யும்.
தற்போது தேவனஹள்ளியில் அமைந்துள்ள கெம்பேகௌடா விமான நிலையத்தை பிடதியில் அமைக்குமாறு யோசனை முன்வைக்கப்பட்டிருந்தது. எனினும், அந்த யோசனையை பொது விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) நிராகரித்தது. எனவே, பிடதியை மீண்டும் ஏற்றுக்கொள்ளப்படுமா என்பது கேள்விக்குறியாகும்.
சிறுகடன் நிறுவனங்களிடம் இருந்து கடனாளிகள் தொல்லைக்கு ஆட்படுவதைத் தடுக்க கொண்டுவரப்பட்டிருக்கும் அவசரச் சட்டம் ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. ஆளுநரின் ஒப்புதல் கிடைத்தவுடன், அவசரச் சட்டம் உடனடியாக அமலுக்கு வரும் என்றாா்.