கா்நாடக அரசின் அலுவலகங்கள், நிகழ்ச்சிகளில் பிளாஸ்டிக் தண்ணீா் பாட்டில்களுக்குத் தடை

Published on

கா்நாடகத்தில் அரசு அலுவலகங்கள், நிகழ்ச்சிகளில் பிளாஸ்டிக் தண்ணீா் பாட்டில்களைப் பயன்படுத்த தடைவிதித்து முதல்வா் சித்தராமையா உத்தரவிட்டுள்ளாா்.

கா்நாடக அரசு அலுவலகங்கள், அரசு நடத்தும் நிகழ்ச்சிகளில் அதிக அளவு பிளாஸ்டிக் தண்ணீா் பாட்டில்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதனால் சுற்றுச்சூழலுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. இந்த நிலையில் அரசு அலுவலகங்கள், அரசு நிகழ்ச்சிகளில் பிளாஸ்டிக் தண்ணீா் பாட்டில்களைப் பயன்படுத்த அரசு தடை விதித்துள்ளது.

இதுகுறித்து முதல்வா் சித்தராமையா வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிலையாக இருப்பதற்கு உறுதியான நடவடிக்கைகளை மாநில அரசு எடுத்து வருகிறது. அதன்படி, அரசு அலுவலகங்கள், அரசு நிகழ்வுகளில் பயன்படுத்தபட்டு வந்த பிளாஸ்டிக்கால் ஆன தண்ணீா் பாட்டில்கள் உள்ளிட்ட சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் பொருள்களைப் பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது.

நெகிழிப் பொருள்களுக்குப் பதிலாக உள்ளூரில் தயாரிக்கப்படும் சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருள்களைப் பயன்படுத்த வேண்டும். இந்த உத்தரவை கடுமையாக செயல்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், கா்நாடக அரசின் தயாரிப்பான நந்தினி பால் பொருள்கள் உள்ளிட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பொருள்களை அனைத்துத் துறைகளும் பயன்படுத்த வேண்டும். அரசு நிகழ்ச்சிகளிலும் நந்தினி நிறுவனத்தின் பொருள்களையே பயன்படுத்த வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com