

கர்நாடகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்புப் பணி அக்.18-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அந்த மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
கர்நாடக மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் சார்பில் ரூ. 420 கோடியில் செப். 22-ஆம் தேதி முதல் சமூக, கல்வி மற்றும் பொருளாதார கணக்கெடுப்பு (ஜாதிவாரி கணக்கெடுப்பு) நடத்தப்படுகிறது. இப்பணி செவ்வாய்க்கிழமை (அக்.7) வரை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால், எதிர்பார்த்தபடி கணக்கெடுப்புப் பணி முடியவில்லை. இப்பணியை முழுமையாக முடிப்பதற்கு காலஅவகாசம் வேண்டும் என ஆசிரியர்கள் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர். இதுதொடர்பாக அமைச்சர்கள், உயரதிகாரிகள், பிற்படுத்தப்பட்டோர் ஆணைய அதிகாரிகளுடன் முதல்வர் சித்தராமையா செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினார்.
கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து முதல்வர் சித்தராமையா செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஜாதிவாரி கணக்கெடுப்புப் பணி அக்.7-ஆம் தேதி முடிவடைந்திருக்க வேண்டும். பெரும்பாலான மாவட்டங்களில் கணக்கெடுப்புப் பணி முடிந்துவிட்டது. ஆனால், ஒருசில மாவட்டங்களில் கணக்கெடுப்புப் பணி முழுமையாக முடியவில்லை. பெங்களூரில் அக்.4 ஆம் தேதிதான் கணக்கெடுப்புப் பணி தொடங்கியது.
கொப்பள் மாவட்டத்தில் இப்பணி 97 சதவீதம் முடிவடைந்துள்ளது. ஆனால், உடுப்பி, தக்ஷிண கன்னட மாவட்டங்களில் 63, 60 சதவீத கணக்கெடுப்புப் பணிகள் மட்டுமே முடிவடைந்துள்ளது. மாநில அளவிலும் எதிர்பார்த்தபடி கணக்கெடுப்புப் பணி முடியவில்லை. இப்பணியை முழுமையாக முடிப்பதற்கு காலஅவகாசம் வேண்டும் என ஆசிரியர்கள் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.
அதன்படி, ஜாதிவாரி கணக்கெடுப்புப் பணியை அக்.18-ஆம் தேதி வரை நீட்டிக்க அரசு முடிவெடுத்துள்ளது. கணக்கெடுப்புப் பணிக்கு இடையூறு இல்லாமல் இருப்பதற்கு வசதியாக அக்.8 முதல் 18-ஆம் தேதி வரை அரசுப் பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுகிறது.
அக்.7ஆம் தேதி வரை தசரா விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், ஜாதிவாரி கணக்கெடுப்புப் பணிக்காக விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. அரையாண்டு தேர்வு நடக்கவிருப்பதால் பியூசி கல்லூரி ஆசிரியர்கள் இப்பணியில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள். எனவே, பியூசி கல்லூரிகளுக்கு விடுமுறை இல்லை என்றார்.
ஹிந்துக்களை பிளவுபடுத்த காங்கிரஸ் முயற்சி
ஜாதிவாரி கணக்கெடுப்பின் மூலம் ஹிந்துக்களை பிளவுபடுத்த காங்கிரஸ் முயற்சிப்பதாக கர்நாடக பாஜக தலைவர் பி.ஒய்.விஜயேந்திரா குற்றம்சாட்டினார்.
இது குறித்து பெங்களூரில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
மாநில அரசின் நெருக்கடிக்கு அடிபணிந்து ஜாதிவாரி கணக்கெடுப்பை பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் நடத்திவருகிறது. கணக்கெடுப்பின்போது 60 கேள்விகள் கேட்கப்பட்டு பதிவு செய்யப்படுகிறது. கணக்கெடுப்பில் சில தேவையற்ற கேள்விகள் இருப்பதாக துணை முதல்வர் டி.கே.சிவகுமாரே கூறியிருக்கிறார். துணை முதல்வர் டி.கே.சிவகுமாரிடம் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்போது பெரும்பாலான கேள்விகளுக்கு அவரால் பதிலளிக்க முடியவில்லை. அப்படியானால், சாதாரண மக்கள் எப்படி 60 கேள்விகளுக்கும் பதிலளிக்க முடியும்?
கர்நாடக அரசு மேற்கொண்டிருக்கும் ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிவியலுக்கு எதிரானதாகும். மாநிலத்தில் போதுமான வளர்ச்சிப் பணிகள் எதுவும் நடைபெறாத நிலையில் மக்களை திசைதிருப்புவதற்காக ஜாதிவாரி கணக்கெடுப்பை காங்கிரஸ் அரசு நடத்துகிறது.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உதவ அரசு முன்னுரிமை அளிக்கவில்லை. எல்லாம் சரியாக இருப்பதாகக் கூறிக்கொள்ளும் முதல்வர் சித்தராமையா, மாநிலத்தில் நிலவும் பிரச்னைகளைப் புரிந்துகொள்ளவில்லை.
ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்தும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லாதபோதும் மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தவும், ஹிந்து மதத்தை பிளவுபடுத்தவும் காங்கிரஸ் அரசு இப்பணியை முன்னெடுத்துள்ளது. இது மிகவும் துரதிருஷ்டவசமானதாகும்.
காங்கிரûஸ காட்டிலும், சமுதாயத்தின் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் கல்வி, பொருளாதார வாய்ப்புகளை செய்து தருவதில் பாஜக மிகுந்த அக்கறை கொண்டுள்ளது. அதனால்தான் மக்கள்தொகை கணக்கெடுப்பின்போதே, ஜாதிவாரி கணக்கெடுப்பையும் நடத்த பிரதமர் மோடி முடிவு செய்திருக்கிறார் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.