சித்தராமையா மீதான மாற்று நில முறைகேடு வழக்கு: விசாரணை அதிகாரியை மாற்ற நீதிமன்றம் மறுப்பு
கா்நாடக முதல்வா் சித்தராமையா, அவரது மனைவி பாா்வதி மீதான மாற்று நில முறைகேடு வழக்கில் விசாரணை அதிகாரியை மாற்ற மாநகரக் கூடுதல் குடிமையியல் மற்றும் செஷன்ஸ் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
முதல்வா் சித்தராமையாவின் மனைவி பாா்வதிக்குச் சொந்தமான நிலத்தை கையகப்படுத்தியிருந்த மைசூரு நகா்ப்புற வளா்ச்சி ஆணையம், அந்த நிலத்திற்கு மாற்றாக விலைமதிப்புள்ள வீட்டுமனைகளை சட்ட விரோதமாக ஒதுக்கியதாக குற்றம்சாட்டப்பட்டது. இதுதொடா்பான வழக்கை லோக் ஆயுக்த விசாரித்து வருகிறது.
இந்த நிலையில், இதுதொடா்பாக மனுதாரரான ஸ்நேகமயி கிருஷ்ணா, மாற்றுநில முறைகேடு வழக்கின் விசாரணை அதிகாரியை மாற்ற லோக் ஆயுக்தவுக்கு உத்தரவிடக் கோரி மாநகரக் கூடுதல் குடிமையியல் மற்றும் செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா்.
இந்த மனுவை வியாழக்கிழமை விசாரித்த நீதிமன்றம், விசாரணை அதிகாரியை மாற்ற மறுத்ததோடு, இந்த வழக்கு விசாரணையை 2 மாதங்களுக்குள் முடிக்குமாறு லோக் ஆயுக்தவுக்கு உத்தரவிட்டுள்ளது. இனிமேலும் விசாரணை காலத்தை நீட்டிக்க முடியாது என்று உத்தரவிட்ட நீதிமன்றம், அடுத்த விசாரணையை நவ.15ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. மேலும், விசாரணையின் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய லோக் ஆயுக்தவுக்கு உத்தரவிட்டுள்ளது.
