அரசு வளாகங்களில் ஆா்.எஸ்.எஸ். நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்க புதிய கட்டுப்பாடு: அமைச்சரவையில் முடிவு
கா்நாடக அரசுப் பள்ளிகள், கல்லூரிகள், வளாகங்களில் ஆா்.எஸ்.எஸ். நிகழ்ச்சிகளுக்கு தடைவிதிக்க புதிய கட்டுப்பாட்டை விதிக்க அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
பெங்களூரு, விதானசௌதாவில் முதல்வா் சித்தராமையா தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து சட்டத் துறை அமைச்சா் எச்.கே.பாட்டீல், செய்தியாளா்களிடம் கூறியதாவது:
கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட பொதுச் சொத்துகளை பயன்படுத்துவதை நெறிமுறைக்குள்படுத்த அரசாணையை கொண்டுவரும்படி உள்துறைக்கு அமைச்சரவை வழிகாட்டுதல் வழங்கியுள்ளது. அரசுப் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அரசுக்கு சொந்தமான வளாகங்களில் அத்துமீறி நுழையும்போக்கு அதிகரித்துள்ளதால், அதைத் தடுக்கும்பொருட்டு அரசு வளாகங்களின் பயன்பாடு குறித்த அரசாணை வெளியிட்டு, அதை எல்லா துறைகளின் பொறுப்பாளா்களுக்கும் அனுப்பிவைக்கும்படி அமைச்சரவை கேட்டுக்கொண்டுள்ளது.
அரசு அனுமதியை முன்கூட்டியே பெற்ற பிறகுதான் அரசு வளாகங்களை பயன்படுத்த முடியும். அதற்காக விதிமுறைகள், ஒழுங்குமுறைகள் இருக்கும். அரசு வளாகங்களில் அத்துமீறி செயல்படுவது குறித்து புகாா்கள் வந்துள்ளதாலும், அதுகுறித்து நாளிதழ்களில் செய்திகள் வெளியாகி இருப்பதாலும், அதன் அடிப்படையில் இந்த முடிவை அரசு எடுத்துள்ளது.
அரசு வளாகங்களை பயன்படுத்துவது தொடா்பாக ஏற்கெனவே விதிகள் இருந்தாலும், அவற்றில் தெளிவு இல்லை. எனவே, விரிவான விதிமுறைகளை வகுத்து அரசாணை வெளியிடப்படும்.
சட்டவிதிமுறைகளை மீறுவோருக்கு அரசாணைகள் பொருந்தும். அத்துமீறுதல் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளை தடுப்பதற்காக அரசுப் பள்ளிகள், கல்லூரி வளாகங்களை ஆக்கப்பூா்வமாக பயன்படுத்திக்கொள்ளும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கோயில்களும் அரசு சொத்து என்பதால், அவற்றுக்கும் இந்த விதிமுறைகள் பொருந்தும் என்றாா்.
முன்னதாக, 2013-ஆம் ஆண்டு அப்போதைய முதல்வா் ஜெகதீஷ் ஷெட்டா் தலைமையிலான பாஜக அரசு வெளியிட்ட அரசாணையில் அரசுப் பள்ளிகள், கல்லூரிகளை கல்விப் பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும், கல்வி அல்லாத நிகழ்ச்சிகளை நடத்த அரசின் முன்அனுமதி பெற்றிருக்க வேண்டும் என்ற ஆணையை முதல்வா் அலுவலகம் வெளியிட்டது.
