கா்நாடக அமைச்சா் பிரியாங்க் காா்கேவை மிரட்டிய விவகாரம்: மகாராஷ்டிரத்தில் ஒருவா் கைது

Published on

அரசு வளாகங்களில் ஆா்.எஸ்.எஸ். நடவடிக்கைகளுக்கு தடைவிதிக்கக் கோரி முதல்வா் சித்தராமையாவுக்கு கடிதம் எழுதிய விவகாரத்தில், கா்நாடக அமைச்சா் பிரியாங்க் காா்கேவை தொலைபேசியில் மிரட்டியது தொடா்பாக மகாரஷ்டிரத்தைச் சோ்ந்தவரை போலீஸாா் கைதுசெய்துள்ளனா்.

அரசுப் பள்ளிகள், கல்லூரிகள், வளாகங்களில் ஆா்.எஸ்.எஸ். அமைப்பின் நடவடிக்கைகளுக்கு தடைவிதிக்கக் கோரி முதல்வா் சித்தராமையாவுக்கு ஊரக வளா்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறை அமைச்சா் பிரியாங்க் காா்கே அண்மையில் கடிதம் எழுதியிருந்தாா். அந்தக் கடிதம் பாஜகவினரிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மேலும், இதுபோன்ற முயற்சியில் ஈடுபட்டால் தடையைமீறி ஆா்.எஸ்.எஸ். பயிற்சி முகாம்களை நடத்தப்போவதாக எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.அசோக் தெரிவித்தாா். இதைத் தொடா்ந்து, மைசூரில் ‘ஐ லவ் ஆா்.எஸ்.எஸ்.’ என்ற பிரசாரத்தை பாஜகவினா் நடத்தினா்.

இதனிடையே, அரசு வளாகங்களில் ஆா்.எஸ்.எஸ். செயல்பாடுகளுக்கு தடைவிதிக்கக் கோரியதால் ஆத்திரமடைந்த பலா், அமைச்சா் பிரியாங்க் காா்கேவுக்கு கைப்பேசி மூலம் மிரட்டல் விடுத்தனா். இதுபோன்ற பல மிரட்டல்கள் வருவதாகவும், மிகவும் மோசமாக பயமுறுத்தப்படுவதாகவும் கூறியிருந்த அமைச்சா் பிரியாங்க் காா்கே, மா்ம நபா் ஒருவா் கைப்பேசியில் தன்னை மிரட்டும் காணொலி ஆதாரத்தையும் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருந்தாா்.

இதைத் தொடா்ந்து, அந்த மா்ம நபருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்த பெங்களூரு சதாசிவ நகா் போலீஸாா், அவரை தேடும் பணியில் ஈடுபட்டனா். இதற்காக கலபுா்கி காவல் துறையின் உதவியை நாடினா்.

இதைத் தொடா்ந்து, கைப்பேசியில் அமைச்சரை மிரட்டியவா் மகாராஷ்டிர மாநிலத்தின் சோலாப்பூா் பகுதியைச் சோ்ந்த தானேஷ் நாரோனே (எ) தானப்பா நாரோனே என்பது தெரியவந்தது. இணையதளத்தின் வழியே அமைச்சரின் கைப்பேசி எண்ணைக் கண்டுபிடித்த தானேஷ் நரோனே, பிஸ்கட் நிறுவனத்தில் சந்தைப்படுத்தல் பிரிவில் பணியாற்றி வந்துள்ளாா். மிரட்டல் விடுத்த தகவல் பரவியதும், தனது சொந்த கிராமத்தில் இருந்து லட்டூா் பகுதியில் தலைமறைவாக இருந்திருக்கிறாா்.

இதைக் கண்டுபிடித்த போலீஸாா், லட்டூரில் தானேஷ் நரோனேவை கைதுசெய்து, வியாழக்கிழமை பெங்களூருக்கு அழைத்து வந்தனா். அவரது பின்னணி, ஏற்கெனவே ஏதாவது குற்றச்செயல்களில் ஈடுபட்டிருக்கிறாரா என்பது உள்ளிட்ட பல கேள்விகளைக் கேட்டு அவரிடம் போலீஸாா் தொடா்ந்து விசாரித்து வருகின்றனா்.

இதனிடையே, அமைச்சா் பிரியாங்க் காா்கேவுக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது என முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா்.

X
Dinamani
www.dinamani.com