காரைக்கால், டிச. 11: குறித்த நாளில் மாத ஊதியம் வழங்குவது, புதிய பதவிகளை நிரப்புவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு உதவிப் பெறும் பள்ளி ஆசிரியர்கள், ஊழியர்கள் காரைக்காலில் சனிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
÷மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற போராட்டத்துக்கு மு.வி.ச. பள்ளித் தாளாளர் குவாஜா மொய்தீன் தலைமை வகித்தார். காரைக்காலில் உள்ள 7 பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள், ஊழியர்கள் கலந்துகொண்டனர்.
÷அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்குவது போல, அரசு உதவிப் பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கும் மாத இறுதியில் ஊதியம் வழங்க வேண்டும். கல்விச் செயலக அரசு ஆணைப்படி புதிய பதவிகள், உயர்த்தப்பட்ட டிஜிடி பதவிகளை காலதாமதமின்றி நிரப்ப வேண்டும். இந்தப் பள்ளிகளுக்கு அரசு வழங்கும் உதவித் தொகையை உயர்த்த வேண்டும். டி பிரிவு ஊழியர்களுக்கு 6-வது ஊதியக் குழுவில் பரிந்துரைத்த சலுகைகளை வழங்க வேண்டும். ஊதியக் குழு பரிந்துரைத்த மீதமுள்ள நிலுவைத் தொகை 30 சதவீதத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
÷அரசு ஊழியர் சம்மேளன கௌரவத் தலைவர் ஜார்ஜ், தலைவர் ஜெய்சிங், புதுவை மாநில ஆசிரியர் கூட்டமைப்பின் தலைவர் த. அசோக், காரைக்கால் மாவட்ட பெற்றோர் சங்கத் தலைவர் எல்.எஸ்.பி. சோழசிங்கராயர், தூய மரியன்னை மேல்நிலைப் பள்ளி துணை முதல்வர் மைக்கேல் ஜோசப், காரைக்கால் மாவட்ட அரசு உதவிப் பெறும் பள்ளிகளின் கூட்டமைப்புச் செயலர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் கோரிக்கைகளை ஆதரித்துப் பேசினர்.