செஞ்சி, டிச. 18: உடைப்பு சீர்செய்யப்படாததால் கடந்த 4 ஆண்டுகளாக ஏரி வறண்ட நிலையிலேயே உள்ளது. இதனால் மேல்சேவூர் கிராம விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.
÷செஞ்சி வட்டம் மேல்சேவூர் கிராமத்தில் உள்ள கல்லேரி ஏரியின் கரைகள் 4 ஆண்டுகளாக உடைந்துள்ளன.
÷தற்போது விழுப்புரம் மாவட்டத்தில் பெய்த கன மழையால் 75 சதவீத ஏரிகள் நிரம்பி உள்ளன. இந்நிலையில் மேல்சேவூர் ஏரிக்கு நீர்வரத்து மிக அதிக அளவில் இருந்தது. ஆனால் ஏரிக்கரைகள் பராமரிப்பில்லாமல் உடைந்துள்ளதால் ஏரிக்கு வரும் நீர் தடையின்றி தானாகவே வெளியேறிவிடுகிறது. இதன் துணை ஏரியான தாங்கல் ஏரியும் இதனால் நிரம்பவில்லை.
÷இந்த ஏரியின் மூலம் இப் பகுதியில் 300 ஏக்கருக்கும் அதிகமான விவசாய நிலம் பாசன வசதி பெறுகிறது. இந்த ஏரியில் 2 மதகுகள் உள்ளன. 1996-ம் ஆண்டிலும், 2003-ம் ஆண்டிலும் இந்த ஏரியை பராமரித்துள்ளனர். ஆனால், தரமற்ற பராமரிப்புப் பணியால் கரைகள் பலவீனமடைந்துவிட்டன. கடந்த 4 ஆண்டுகளாக இந்த ஏரி இப்படியே உடைந்த நிலையில் உள்ளது. ஏரி நீர்ப்பாசன சங்க தலைவரோ, அல்லது ஊராட்சி மன்ற தலைவரோ, அரசு அதிகாரிகளோ எவரும் இதைப்பற்றி கண்டு கொள்ளவில்லை என அப்பகுதியினர் வருத்தம் தெரிவிக்கின்றனர்.
÷விழுப்புரம் மாவட்டத்தில் ஆற்றுப்பாசனம் இல்லை. ஆற்றில் இருந்து வரும் நீரை தடுப்பணைகள் மூலம் தடுத்து ஏரிகளை நிரப்பி பின்னர் அந்த நீரை விவசாயத்துக்கு பயன்படுத்தி வருகின்றனர். இப்படி ஏரி நீரையே பெரிதும் நம்பி இருக்கும் விவசாயிகள் தற்போது தண்ணீர் இல்லாமல் தவித்து வருகின்றனர். ஏரி முழுவதும் நீர் நிரம்பி இருந்தால் 3 போகம் விளைச்சலை விவசாயிகள் அறுவடை
செய்திருப்பர்.
÷மாவட்ட நிர்வாகமோ, பொதுப்பணித் துறையோ இதில் அக்கரை காட்டவில்லை என்பது வேதனைக்குரியது. விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், இலவச மின் மோட்டார் திட்டம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. விவசாயத்துக்கு அடிப்படையாக விளங்கக் கூடிய நீர் ஆதாரமே இல்லாதபோது அரசு அறிவித்த திட்டங்களால் என்ன பயன்? நீர் இன்றி அமையாது உலகு என்ற பழமொழிதான் நினைவுக்கு வருகிறது.