விழுப்புரம், ஜன. 8: வானூரை அடுத்துள்ள ஆரோவில் ஐ.ஏ.எஸ். அலுவலர் ராமசாமியை மத்திய அரசு திரும்பப்பெற வலியுறுத்தி ஆரோவில் ஏஐடியுசி தொழிற்சங்கத்தின் சார்பில் வானூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆரோவில்லில் அமைந்துள்ள மாத்திர் மந்திரில், சுற்றுப்பகுதியைச் சேர்ந்த 10 கிராமங்களிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கட்டடப் பணி, தோட்டக்கலை, மரச்சாமான் செய்யும் பணிகள் செய்து வருகின்றனர். இதில் 8 தொழிலாளர்களை சில வாரங்களுக்கு முன்பு ஆரோவில் நிர்வாகம் பணி நீக்கம் செய்தது.
இதை கண்டித்து மந்திர் முன்பு பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. இந்நிலையில் ஆரோவில் ஏஐடியுசி சார்பில் வேலை நீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு பணி வழங்கவும், ஊதிய உயர்வு வழங்கவும், ஆரோவில் ஐஏஎஸ் அலுவலர் ராமசாமியை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சங்கச் செயலர் ஜெகதீசன் தலைமை தாங்கினார். புதுவை ஏஐடியுசி துணைப் பொதுச் செயலர் தினேஷ் பொன்னையா தொடக்க உரையாற்றினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக்குழு அர்ஜுனன், மாவட்ட துணைச் செயலர் இன்பஒளி, ஏஐடியுசி புதுவை மாநில செயலர் சந்திரசேகரன், வட்டச் செயலர் சுப்பிரமணி, துணைச் செயலர் காளியப்பன், கோட்டகுப்பம் நகரச் செயலர் சகாபுதீன் உள்ளிட்ட பலர் பேசினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.