கடலூர், ஜன.29: கடலூர் மாவட்டம் அண்ணா கிராமம் ஒன்றியத்தில் ஊரக வேலை உறுதித் திட்டத்தில், பல லட்சம் ரூபாய்க்கு முறைகேடு நடந்து இருப்பதாக, பொதுநல அமைப்பு புகார் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அன்னை தெரசா பொதுநலப் பேரவை மாநில தலைமை நிலையச் செயலர் மார்க்ஸ் ரவீந்திரன் வியாழக்கிழமை, கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனு:
அண்ணா கிராமம் ஒன்றியம் கீழ்கவரப்பட்டு காலனியில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில், தலித் மக்களுக்கு வேலை வழங்கப்படவில்லை. ஏரி குளங்கள், வாய்க்கால்கள் ஆழப்படுத்தும் பணியும் நடைபெறவில்லை.
ஆனால் கீழ்கவரப்பட்டு ஊராட்சியில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பலருக்கு வேலை வழங்கப்பட்டதாகவும், ரூ.1,37,29,300 நிதி வழங்கப்பட்டு இருப்பதாகவும் தகவல் பெறும் உரிமைச் சட்டம் மூலம் தெரிய வந்துள்ளது. இந்த நிதியில் இருந்து 4 நாள்களுக்கு மட்டுமே தலித் மக்களுக்குக் கூலி வழங்கப்பட்டு உள்ளது.
தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில், கீழ்கவரப்பட்டு ஊராட்சி எல்லையில் உள்ள எழுமேடு ஏரி சீரமைக்கப்பட்டதாகவும், அதற்கு ரூ.30,05,700 செலவிடப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஏரி சீரமைக்கப்படவில்லை. ஒரே வாய்க்காலுக்கு 4 போலியான பெயர்களில், ரூ.31,43,600 செலவிடப்பட்டதாக பதிவேடுகளில் உள்ளது. ஆனால் அவ்வாறு வேலை நடைபெறவில்லை.
எனவே போலியான ஆவணங்கள் தயாரித்து பொதுமக்களின் கையெழுத்தைப் போலியாக போட்டு, அரசை ஏமாற்றி, ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பல லட்சம் ரூபாய்க்கு முறைகேடு நடந்துள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விசாரணை நடத்த வேண்டும் என்றும், மனுவில் கூறப்பட்டு உள்ளது.