நெய்வேலி, ஜன. 29: சென்னையில் நடந்த குடியரசு தின தடகள விளையாட்டுப் போட்டியில் என்.எல்.சி. ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் தங்கம் வென்று சாதனை படைத்தனர்.
மாநில கல்வித்துறையால் நடத்தப்படும் குடியரசு தின விழா விளையாட்டுப் போட்டிகள் அண்மையில் சென்னையில் நடைபெற்றது. இதில் மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் இருந்து 1400 மாணவர்கள் பங்கேற்றனர்.
இதில் 400 மீ. தொடர் ஓட்டப் போட்டியின் சீனியர் பிரிவில் என்.எல்.சி. ஆண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் கோகுலகிருஷ்ணன், சுதர்சன், பிரேம்குமார், ஹேமகிருஷ்ணன் ஆகியோர் புதிய சாதனை படைத்து தங்கம் வென்றனர்.
இதேபோன்று சூப்பர் சீனியர் பிரிவில் 400 மீ. தொடர் ஓட்டப் போட்டியில் இதே பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் கார்த்திக், பிரசாந்த், பாண்டியன் மற்றும் கருப்பசாமி ஆகியோர் வெள்ளிப்பதக்கம் வென்றனர்.மேலும் 100 மீ. ஒட்டப் போட்டியில் கோகுலகிருஷணன் ஒரு வெள்ளியும், பிரேம்குமார் 200 மீ. மற்றும் 400 மீ. ஓட்டப் போட்டிகளில் வெள்ளிப்பதக்கமும், ரொக்கப் பரிசுகளையும் வென்றனர்.
மாநில அளவிலான போட்டிகள் தங்கம், வெள்ளிப் பதக்கம் வென்ற மாணவர்களையும், பயிற்சியாளர் பி.ஜேம்ûஸயும், என்.எல்.சி. நகர நிர்வாக முதன்மைப் பொது மேலாளர் செந்தமிழ்செல்வன், கல்வித்துறைச் செயலர் சுகுமார் மற்றும் விளையாட்டுப் பள்ளித் தாளாளர் சுந்தர்ராஜன் ஆகியோர் பாராட்டினர்.
ஜவகர் பள்ளி மாணவர்கள் சாதனை: இதேபோன்று ஜவகர் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவிகள் ஜி.பிரியங்கா, ஜி.மோகனா, எம்.தேவி மற்றும் சுபரஞ்சனி ஆகியோர் 14 வயதுக்குட்பட்டோருக்கான 400 மீ. தொடர் ஓட்டப்போட்டியில் தங்கம் வென்று சாதனைப் படைத்தனர். இதில் ஜி.பிரியங்கா தனிநபர் பிரிவில் 200 மீ. ஓட்டப்போட்டியில் தங்கமும், 100 மீ. ஓட்டப்போட்டியில் வெள்ளியும் வென்றார். போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளை பள்ளியின் முதல்வரி என்.யசோதா பாராட்டினார்.