கள்ளக்குறிச்சி, ஜூலை 3: கள்ளக்குறிச்சியில் அடகுகடை உரிமையாளரை கார் ஏற்றி கொலை செய்ய முயன்ற மாடர்ன் ரைஸ் மில் உரிமையாளர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டார்.
கள்ளக்குறிச்சியில் சேலம் சென்னை நெடுஞ்சாலையில் நகை அடகுகடை வைத்திருப்பவர் குஷால்ராஜ் (46).
இவர் கள்ளக்குறிச்சி அண்ணா நகரில் குடியிருக்கும் மாடர்ன் ரைஸ் மில் உரிமையாளர் சக்கரவர்த்தியிடம் அவருடைய வீடு, மனையை கடந்த 2008-ம் ஆண்டு ரூ. 16 லட்சத்து 50 ஆயிரத்திற்கு வாங்குவதற்கு பேசியுள்ளார்.
அன்றே முன்பணமாக ரூ. 10 லட்சம் கொடுத்துள்ளார். அதன் பின் 4.3.09-ல் மேலும் ரூ. 2 லட்சம் கொடுத்துவிட்டு சக்கரவர்த்தியிடம் கிரயம் செய்து கொடுக்கும்படி கேட்டுள்ளார். இதற்கு சக்கரவர்த்தி காலதாமதம் செய்துள்ளார்.
இது குறித்து குஷால்ராஜ் கள்ளக்குறிச்சி வட்ட சட்டப் பணிக் குழுவில் மனு கொடுத்தார். வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் சனிக்கிழமை இரவு அவர் அடகுகடையை பூட்டி விட்டு கடைமுன்பு நின்று கொண்டிருந்தாராம்.
அப்போது மாருதி காரை வேகமாக ஓட்டி வந்து குஷால்ராஜ் மீது காரை ஏற்றுவதுபோல் சக்கரவர்த்தி வந்தாராம். அதைக் கண்டு குஷால்ராஜ் அதிர்ச்சியடைந்தார். "வழக்கை வாபஸ் பெற்றுக் கொள். இல்லை என்றால் கொன்றுவிடுவேன்' என்று மிரட்டினாராம். இது குறித்து குஷால்ராஜ் கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸôர் வழக்குப் பதிவு செய்து சக்ரவர்த்தியை கைது செய்தனர்.