காஞ்சிபுரம், ஜூலை 3: காஞ்சிபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகம் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது. காஞ்சிபுரம் மருத்துவமனை சாலையில் கடந்த ஆட்சியில் காஞ்சிபுரம் தொகுதி எம்.எல்.ஏ. அலுவலகம் கட்டப்பட்டது. ஆனால் அந்த அலுவலகம் சம்பிராதாயத்துக்கு மட்டுமே அவ்வப்போது திறக்கப்பட்டு வந்தது.
காஞ்சிபுரம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்தை முறையாக திறந்து அங்கு பொதுமக்களின் குறைகளை மனுக்களாக பெற வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் பலர் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில் காஞ்சிபுரம் தொகுதி எம்.எல்.ஏ. அலுவலகம் புதுப்பிக்கப்பட்டு தற்போது திறக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் தொகுதி எம்.எல்.ஏ. சோமசுந்தரம் இந்த அலுவலகத்தை திறந்து வைத்தார். அப்போது அவர் பேசுகையில், "காலை 10 மணி முதல் மாலை 6 மணிவரை பொதுமக்கள் தங்கள் குறைகளை இங்கு மனுக்களாக அளிக்கலாம். அது உரிய அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உடனடியாக தீர்வு காணப்படும்' என்றார்.
இந் நிகழ்ச்சியில் முன்னாள் எம்.பி. காஞ்சி பன்னீர்செல்வம், முன்னாள் எம்எல்ஏக்கள் ஜெய்பாலாஜி, மைதிலி திருநாவுக்கரசு, நகர செயலர் என்.பி. ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.