திருக்கோவிலூர், ஜூலை 3: திருக்கோவிலூரில் நாளுக்குநாள் பெருகிவரும் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
மாவட்டத்தின் மிக முக்கிய நகரமாக விளங்கும் திருக்கோவிலூர் நாளுக்குநாள் பெருகிவரும் மக்கள் தொகை, வாகனப் பெருக்கம் ஆகியவற்றின் காரணமாக நெரிசலில் சிக்கித் தவிக்கிறது.
ஆயிரக்கணக்கானோர் கூடும் இந்நகரத்தில் எப்போதும் மக்கள் கூட்டம் நிறைந்தும், போக்குவரத்து நெரிசல் மிகுந்தும் காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் தொடர்ந்து படாதபாடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக பஸ் நிலையம், மருத்துவமனை சாலை, வடக்குவீதி, மேலவீதி, 4 முனை சந்திப்பு, 5 முனை சந்திப்பு, செவலை ரோடு, கிழக்குவீதி, பள்ளிவாசல் தெரு, சின்னக்கடை தெரு, மார்க்கெட் வீதி ஆகிய பகுதிகளில் சாலையை ஆக்கிரமித்து கடைகள் வைத்திருப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
மிச்சம் மீதம் இருக்கும் சாலையில் ஆட்டோ மற்றும் பொதுமக்களின் வாகனங்களும் நிறுத்தப்படுவதால் மேலும் நெரிசல் அதிகமாகிறது. இதனால் இந்நகரத்தை கடப்பதற்கு போதிய அளவு வழியில்லாததால் வாகனங்கள் ஊர்ந்து செல்லவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.
இப்பகுதியில் திணறும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த, தொடரும் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றிட, சாலைகளில் தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்களை ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுக்கவேண்டியது மிகவும் அவசியமானது.
எனவே சம்மந்தப்பட்ட அரசு அதிகாரிகள் இனியாவது கடமையை உணர்ந்து பொறுப்புடன் செயல்படுவார்களா என்று பொதுமக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.