கடலூர்,ஜூலை 9: கடலூர் அருகே ரூ. 300 கோடியில் கப்பல் கட்டுதல் மற்றும் பழுதுபார்க்கும் தொழிற்சாலை தொடங்கப்பட இருக்கிறது. குட் எர்த் ஷிப் பில்டிங் என்ற நிறுவனம் இத்தொழிற்சாலையத் தொடங்குகிறது. இது குறித்த மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் 14-ம் தேதி வேலங்கிராயன்பேட்டையில் நடக்க உள்ளது.
கடலூரில் கப்பல் கட்டும் தொழிற்சாலை அமைக்க, 2006-ம் ஆண்டே அறிவிப்பு வெளியானது. இதற்காக 500 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு இருந்தது. புதுக்குப்பம் - அன்னப்பம்பேட்டை இடையே அமைய இருப்பதாக முன்பு தெரிவிக்கப்பட்டது. தற்போது வேலங்கிராயன்பேட்டை கிராமத்தில் கப்பல் கட்டும் மற்றும் பழுதுபார்க்கும் தொழிற்சாலை அமைய இருப்பதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
முதல் கட்டமாக சுமார் 150 ஏக்கர் பரப்பளவில், ரூ. 300 கோடியில் இத்தொழிற்சாலை தொடங்கப்படும் என்றும் அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. பின்னர் பெரிய அளவில் விரிவு படுத்த வாய்ப்பு உள்ளது. கப்பல் கட்டும் தொழிற்சாலை கட்டுமானப் பணிகள் தொடங்கும் நிலையில், அலுவலர்கள் 200 பேருக்கும், தொழிலாளர்கள் 800 பேருக்கும், தொழிற்சாலை செயல்படத் தொடங்கியதும் 2 ஆயிரம் பேருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
முதல் கட்டமாக ஆண்டுக்கு 50 ஆயிரம் டன் இரும்பைப் பயன்படுத்தி, 2 புதிய கப்பல்களைக் தயாரிக்கும் திறன் கொண்டதாகவும், 2 கப்பல்களைப் பழுதுபார்க்கும் திறன் கொண்டதாகவும் இத்தொழிற்சாலை அமையும். வரும் ஆண்டுகளில் 5 லட்சம் டன் இரும்பைக் கையாளும் திறன் கொண்டதாக இருக்கும். முதல் கட்டமாக தொழிற்சாலைக்கு கடலில் 2 ஜெட்டிகள் கட்டப்படும். தொழிற்சாலை அமையும் பகுதியை 2007-லேயே சிறு துறைமுகம் பகுதியாக தமிழக அரசு அறிவித்து உள்ளது.
புதிய தொழிற்சாலைக்கான மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம், 14-ம் தேதி வேலங்கிராயன் பேட்டையில் நடைபெற இருக்கிறது. இத்தொழிற்சாலையால் ஏற்படும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டு உள்ளன. அவை பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட உள்ளன.
இத்தொழிற்சாலை அமைவதால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து, மத்திய சுற்றச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்துக்கும், தமிழக அரசு மாசுக் கட்டுப்பாடு வாரியத்துக்கும், தமிழ்நாடு நுகர்வோர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் எம். நிஜாமுதீன் கருத்துக்ளை அனுப்பி உள்ளார். அவர் இதுகுறித்து சனிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:
கடலூர் அருகே அமைய இருக்கும் கப்பல் கட்டும் தளத்தால், இரும்பு வார்ப்படம், ரசாயன வர்ணங்கள் பயன்பாடு உள்ளிட்டவற்றால் சுற்றுச்சூழல் வெகுவாகப் பாதிக்கப்படும். ஏற்கனவே கடலூர் மாவட்ட கடலோரப் பகுதிகளில் அமைந்துள்ள ரசாயனத் தொழிற்சாலைகளின் கழிவுகளால், கரையில் இருந்து 8 கி.மீ. தூரம் வரை, கடல் மாசுபட்டு மீன் வளம் அழிந்து விட்டது.
சாட்டிலைட்கள் மூலம் மேற்கொண்ட ஆய்வில், கடந்த சில ஆண்டுகளில் அக்கரை கோரி, தேவனாம்பட்டினம் மற்றும் தாழங்குடா பகுதிகளில் 1,000 மீட்டர் தூரம், கடல் அரிப்பு ஏற்பட்டு இருப்பதாகத் தெரியவந்துள்ளது. புதுவை மாநிலம் வீராம்பட்டினத்தில் மீன்பிடித் துறைமுகம் அமைத்ததால், விழுப்புரம் மாவட்டக் கடலோர கிராமங்கள் பல, கடல் அரிப்புக்கு இலக்காகி இருப்பதே இதற்கு எடுத்துக் காட்டு.
புதிய கப்பல் கட்டும் தளத்துக்காக மேலும் புதிய ஜெட்டிகள், நீர்வழிப்பாதைகள் அமையும் போது, கடல் அரிப்பு மேலும் அதிகமாகும். கப்பல் கட்டுதல் மற்றும் பழுதுபார்ப்புப் பணிகளையொட்டி ஏராளமான கப்பல்கள், கடலூர் மாவட்டக் கடல் பகுதியில் நுழைந்து அதிர்வுகளை ஏற்படுத்தி, மீன் வளத்தை வேறு பகுதிகளுக்கு நகரச் செய்துவிடும். இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் அழிய வாய்ப்பு உள்ளது என்றார்.