திருத்தணி, ஜூலை 9: வாக்காளர்களது கைப்பேசி எண் மற்றும் இ-மெயில் ஆகியவற்றை சேகரிப்பது தொடர்பாக, வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு ஒரு நாள் பயிற்சி முகாம் டாக்டர் ராதாகிருஷ்ணன் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்றது.
திருத்தணி தொகுதியில் உள்ள வாக்காளர் பட்டியலில் உள்ள வாக்காளர்களின் கைப்பேசி எண் மற்றும் இமெயில் ஐடி ஆகியவற்றை சேகரிப்பது குறித்து திருத்தணி ஆர்.டி.ஓ. பா. ரவீந்திரன் தலைமையில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு ஒருநாள் பயிற்சி முகாம் நடைபெற்றது.
திருத்தணி வட்டாட்சியர் குணசுந்தரி வரவேற்றார். தனி வட்டாச்சியர் சங்கரி முன்னிலை வகித்தார். பயிற்சியில் ஆர்.டி.ஓ. பா.ரவீந்திரன் பேசியது: ஒவ்வொரு வாக்குச்சாவடி அலுவலரும் அவரவருக்குரிய வாக்காளர் பட்டியலை கொண்டு வாக்காளர்களிடம் நேரில் சென்று அவர்களது அலைபேசி எண் மற்றும் இமெயில் ஐடி ஆகியவற்றை வாக்காளர்கள் பட்டியலில் மிகத் தெளிவாக குறிப்பிட வேண்டும்.
இல்லையெனில் கைபேசி எண் பிழையின் காரணமாக சம்மந்தப்பட்ட வாக்காளரை தொடர்பு கொள்ள இயலாத நிலை ஏற்படும். சம்பந்தப்பட்ட வாக்காளரது அலைபேசி எண்ணை பெற்று அவரது புகைப்படத்திற்கு கீழ் தெளிவாக குறிப்பிட்டு எழுதவேண்டும். அதைவிடுத்து அவரது உறவினர்களுடைய அலைபேசி எண்ணை எழுதுதல் கூடாது.
ஒரு வாக்காளரை தொடர்பு கொள்ளும்போது அவர் குறிப்பிடும் அலைபேசி எண் அவருடையதுதானா என்பதை அவரிடம் தெளிவாக கேட்டு உறுதிபடுத்திக்கொண்ட பின்னரே அந்த எண்ணை வாக்காளர் பட்டியலில் குறிப்பிட வேண்டும்.
ஒரு குடும்பத்தில் எத்தனை வாக்காளர்கள் உள்ளனரோ அவர்கள் அனைவரின் அலைபேசி எண்ணையும் அவர்களது புகைப்படத்துக்கு கீழ் குறிப்பிட வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் வீட்டு தொலைபேசி எண்ணை எழுதக்கூடாது. அலைபேசி மற்றும் இமெயில் ஐடி இல்லாத வாக்காளர்களின் புகைப்படத்தின் கீழ் அலைபேசி எண், இமெயில் ஐடி இல்லை என குறிப்பிட வேண்டும்.
உடனடியாக இப்பணியினை துவங்க வேண்டும். வாக்காளர் அலைபேசி எண், இமெயில் ஐடி சேகரிக்கும் பணி குறித்து உரிய படிவத்தில் பூர்த்தி செய்து 10 அல்லது 15 நாள்களுக்குள் சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்றார். இப்பயிற்சி முகாமில் 100-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடி அலுவலர்கள் கலந்துகொண்டனர்.