திருத்தணி, ஜூலை 14: திருத்தணியில் அரசு பஸ் மோதி தனியார் டயர் தொழிற்சாலையில் வேலை செய்து வந்த இளைஞர் உயிரிழந்தார்.
திருத்தணி ஒன்றியம் வேலஞ்சேரி ரெட்டி மோட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தசரதன். இவரது மகன் வேலு (28). இவர் திருத்தணி - அரக்கோணம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் டயர் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார்.
புதன்கிழமை வேலு வேலைக்கு செல்ல கே.ஜி.கண்டிகை பஸ் நிறுத்தத்தில் நின்றுகொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது அதே டயர் தொழிற்சாலையில் வேலைபார்க்கும் ஆர்.கே.பேட்டை முஸ்லிம் நகர் பகுதியை சேர்ந்த பாபா மகன் ஆசிக்பாஷா (18) மோட்டார் சைக்கிளில் திருத்தணி நோக்கி வந்துகொண்டிருந்தார்.
அப்போது கே.ஜி.கண்டிகையில் நின்றிருந்த வேலு லிப்டுக் கேட்டு ஆசிக்பாஷாவின் மோட்டார் சைக்கிளில் ஏறியுள்ளார். வாகனத்தை வேலுவே ஓட்டியதாகத் தெரிகிறது. அப்போது காஞ்சிபுரத்தில் இருந்து திருப்பதி செல்லும் அரசு பஸ் திருத்தணி சித்தூர் சாலையில் உள்ள வளைவில் திரும்பும்போது திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் வேலு சம்பவ இடத்திலேயே இறந்தார்.
தகவலறிந்த திருத்தணி இன்ஸ்பெக்டர் பாலு, சப்-இன்ஸ்பெக்டர்கள் ருக்மாங்கதன், மூர்த்தி மற்றும் போலீஸôர் சம்பவ இடத்துக்கு வந்து படுகாயம் அடைந்த ஆசிக்பாஷாவை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
விபத்தில் இறந்த வேலுவின் உடலை பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து திருத்தணி போலீஸôர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.