காதி அங்காடியில் அமைச்சர் ஆய்வு
திருவள்ளூர், ஜூலை 14: திருவள்ளூரில் உள்ள காதி மற்றும் கதர் அங்காடியில் கதர் மற்றும் கிராமத் தொழில் துறை அமைச்சர் செந்தூர்பாண்டி செவ்வாய்க்கிழமை காலை திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
திருவள்ளூர் ஜே.என்.சாலையில் தமிழக அரசின் காதி மற்றும் கதர் அங்காடி உள்ளது. மிகவும் குறுகலான கட்டடத்தில் போதிய அளவு பொருள்கள் இல்லாமல் அங்காடி இயங்கி வருவதாக வந்த தகவலை அடுத்து அமைச்சர் செந்தூர்பாணடி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின் போது கடையில் இருக்கும் துணி ரகங்கள், சோப்பு வகைகள், தேன் உள்ளிட்ட பொருள்களை ஆய்வு செய்து விற்பனை விவரங்களையும் கேட்டறிந்தார். அப்போது இங்கு தனியார் காதி அங்காடியில் விற்பனை செய்யும் அளவிற்கு இங்கு பொருள்கள் விற்கப்படுவதில்லை என பொதுமக்கள் புகார் கூறினர்.
புகார்களை கேட்டுக் கொண்ட அமைச்சர் செந்தூர்பாண்டி, தமிழக முதல்வர் ஜெயலலிதா கதர் மற்றும் கிராம தொழில் துறை தொடர்பான பகுதிகளில் சென்று ஆய்வு செய்து அத்துறையை வளர்ச்சி அடைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். அதன்படி இன்று செவ்வாப்பேட்டை, பூண்டி, ஆவடி ஆகிய பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளை ஆய்வு செய்தேன்.
இங்குள்ள அனைத்து தொழிற்சாலைகள் மற்றும் கதர் அங்காடிகளையும் நவீனமயமாக்கி விற்பனையை அதிகரிப்பதே இந்த ஆய்வின் நோக்கம் என்றார்.
இந்நிகழ்ச்சியின்போது தலைமை செயல் அலுவலர் சந்திரகாந்த் பிகாம்ளே, நிதிநிலை ஆலோசகர் சாந்தகுமார், இணை இயக்குநர் கோபாலகிருஷ்ணன், உதவி இயக்குநர் நிர்மலாதேவி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.