மதுராந்தகம், ஜூலை 14: மதுராந்தகம் அருகே வேன்-கார் மோதியதில் பெண் ஒருவர் உயிரிழந்தார்.
செங்கல்பட்டு அருகே உள்ள மகேந்திரா சிட்டி வளாகத்தில் இயங்கி வரும் தனியார் தோல் நிறுவனத்தில் பணிபுரியும் செய்யூர் தாலுகாவுக்குட்பட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 15-க்கும் மேற்பட்ட பெண்களை நிறுவனத்தின் வேனில் அழைத்துச் செல்வது வழக்கம்.
வியாழக்கிழமை காலை வழக்கம் போல் அப்பகுதி பெண்களை அழைத்துக் கொண்டு வேன் மதுராந்தகம்-பவுஞ்சூர் சாலையில் வந்துக் கொண்டிருந்த போது வெளிக்காடு என்ற இடத்தில் எதிரில் வந்த கார் மீது மோதியது. இதில் வேன் தலைகுப்புற கவிழ்ந்தது.
இதில் இரண்யசித்தி கிராமத்தைச் சேர்ந்த பரசுராமனின் மகள் கீர்த்திகாதேவி மற்றும் அமுதா,பிரேமா, கலைமணி,ரோஸ்மேரி, அன்னபூரணி,சங்கீதா ஆகிய பெண்கள் பலத்த காயமடைந்தனர். இவர்கள் மீட்கப்பட்டு மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இதில் கீர்த்திகா தேவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அரசு மருத்துவமனையில் கீர்த்திகா தேவிக்கு சரியாக சிகிச்சை அளிக்கப்படவில்லை என்று குற்றம்சுமத்தி அவரது பெற்றோர்கள், உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டனர்.