சிறுதாவூரில் பஞ்சமி நிலம் முறைகேடாக வாங்கியதாக புகார் இல்லை

காஞ்சிபுரம், ஜூலை 14: சிறுதாவூரில் பஞ்சமி நிலம் முறைகேடாக வாங்கப்பட்டது தொடர்பான புகார் எதுவும் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்துக்கு வரவில்லை என்று அந்த ஆணையத்தின் உறுப்பினர் லதா பிரியகுமார் தெரிவித்தா
Published on
Updated on
1 min read

காஞ்சிபுரம், ஜூலை 14: சிறுதாவூரில் பஞ்சமி நிலம் முறைகேடாக வாங்கப்பட்டது தொடர்பான புகார் எதுவும் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்துக்கு வரவில்லை என்று அந்த ஆணையத்தின் உறுப்பினர் லதா பிரியகுமார் தெரிவித்தார்.

அன்னை இந்திரா மரகதம் சந்திரசேகர் கிராம மேம்பாட்டு மையம் சார்பில் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பரிசளிக்கும் விழாவில் பங்கேற்க லதா பிரியகுமார் வியாழக்கிழமை காஞ்சிபுரம் வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியது:

கடந்த முறை நான் காஞ்சிபுரம் வந்தபோது பல்வேறு தாழ்த்தப்பட்ட மாணவர் விடுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தேன். அப்போது ஈஞ்சம்பாக்கம் மாணவர் விடுதியில் பாய் மற்றும் சில விளையாட்டு பொருள்களை கேட்டிருந்தனர். தனியார் பங்களிப்புடன் அக் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது.

தாழ்த்தப்பட்டோர் மாணவர் விடுதியில் வழங்கப்படும் உணவுகளை தரமாக வழங்க ஆலோசனைகளை கூறியுள்ளோம். தற்போது ஒரு மாணவருக்கு மாதத்துக்கு ரூ.450 என்ற வகையில் உணவுக்கு நிதி ஒதுக்கப்படுகிறது. இந் நிதியை ரூ.900-ஆகவோ, அல்லது ரூ.1000 ஆகவோ உயர்த்த பரிந்துரைகளை வழங்கியுள்ளேன். மேலும் தாழ்த்தப்பட்டோர் மாணவர் விடுதியில் உரிய வசதிகளை செய்துதர ஆலோசனைகள் வழங்கியுள்ளோம்.

பஞ்சமி நிலங்களை வாங்குவது, விற்பது சட்டப்படி குற்றமாகும். பஞ்சமி நிலங்கள் தற்போது யாரிடம் உள்ளது என்று ஆய்வு செய்து வருகிறோம். பஞ்சமி நிலம் வாங்கப்படுவதைத் தடுக்க இது அரசுக்கு சொந்தமான இடம் என்று பெயர் பலகை வைப்பது போல் இது பஞ்சமி நில இடம் என்று பெயர் பலகை வைக்க மாவட்ட நிர்வாகத்துக்கு பரிந்துரைகளை அனுப்பியுள்ளோம் என்றார்.

 பின்னர் நிருபர்களின் கேள்விக்கு அவர் அளித்த பதில்:

சிறுதாவூரில் பஞ்சமி நிலம் முறைகேடாக வாங்கப்பட்டுள்ளதாகப் புகார் கூறப்படுகிறதே என்று நிருபர்கள் கேட்டதற்கு, அது தொடர்பாக எந்தப் புகாரும் தாழ்த்தப்பட்டோர் தேசிய ஆணையத்துக்கு வரவில்லை என்றார்.

ஆதிதிராவிடர் சிறப்புக் கூறுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ள நிதி வேறு திட்டங்களுக்கு பயன்படுத்தப்படுவதாக பல ஆண்டுகளாகப் புகார்கள் கூறப்படுகிறதே என்று கேட்டதற்கு, அது தொடர்பாக நாங்கள் கவனித்து வருகிறோம். குறிப்பிட்டு ஏதாவது இதுபோல் புகார் இருந்தால் கூறுங்கள் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.