கடலூர், ஜூலை 14: கடலூர் அருகே செவ்வாய்க்கிழமை நள்ளிரவு, இளைஞர் உதயசூரியன் (28) கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார்.
கடலூரை அடுத்த சின்ன பிள்ளையார் மேடு கிராமத்தைச் சேர்ந்தவர் ஞானசுந்தரம் மகன் உதயசூரியன். சிப்காட் தொழிற்பேட்டையில் ஐஸ்கட்டிகள் தயாரிக்கும் ஆலையில் வேலை பார்த்து வந்தார். செவ்வாய்க்கிழமை இரவு சுப்பிரமணியபுரம் சென்றுவிட்டு இரவு 10 மணிக்கு வீடு திரும்பினார். பின்னர் கர்ப்பிணியாக இருக்கும் மனைவி பத்மாவுக்கு, சிற்றுண்டி வாங்கிவர கன்னாரப்பேட்டை கடைத் தெருவுக்குச் சென்றார்.
ஆனால் நீண்டநேரம் ஆகியும் உதயசூரியன் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் தேடிப் பார்த்தபோது அவர், சின்னபிள்ளையார் மேடு டாஸ்மாக் மதுக்கடை அருகே கோரமாகக் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது முகம் சிதைக்கப்பட்டு இருந்தது. தகவல் அறிந்ததும் கடலூர் போலீஸ் துணைக் கண்காணிப்பாளர் வனிதா மற்றும் முதுநகர் போலீஸôர் விரைந்து வந்து, உதயசூரியனின் சடலத்தைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.
உதயசூரியனுக்கும் அதே ஊரைச் சேர்ந்த இளைஞர் சிவாவுக்கும் (22) முன் விரோதம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. சிதம்பரம் சிவபுரியைச் சேர்ந்த தாதா சுரேஷ் என்பவருடன் சிவா நட்பு கொண்டு இருந்தாராம்.
இதை உதயசூரியன் கண்டித்து வந்ததாகக் கூறப்படுகிறது. பண்ருட்டி அருகே நடந்த நகைக் கொள்ளை வழக்கில், உதயசூரியன் கொடுத்த தகவலின்பேரில், சுரேஷ் கைது செய்யப்பட்டாராம். பஸ் உடைப்பு வழக்கு ஒன்றில், சிவாவை போலீஸôர் விசாரிக்க உதயசூரியன் காரணமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இதன் காரணமாக உதயசூரியனை, சிவாவும் அவரது கூட்டாளிகளும் சேர்ந்து கொலை செய்து இருக்கலாம் என்று போலீஸôர் சந்தேகிக்கிறார்கள். கொலை தொடர்பாக 3 பேரை போலீஸôர், பிடித்து விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.
இந்த நிலையில் உதயசூரியனைக் கொலை செய்தவர்களைக் கைது செய்யவும், டாஸ்மாக் மதுக்கடையை அப்புறப்படுத்தவும் வலியுறுத்தி, புதன்கிழமை சின்னபிள்ளையார் மேடு கிராம மக்கள், டாஸ்மாக் கடைமுன் திரண்டு, மறியல் போராட்டத்துக் தயாரானார்கள். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
போலீஸôர் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திக் கலைந்து போகச் செய்தனர்.
3 பேர் கைது
கடலூர் முதுநகர் போலீஸôர் விசாரணை நடத்தி சிவாவின் கூட்டாளிகள் என்று கூறப்படும் அணுக்கம்பட்டு கிளின்டன் பிரபு (26), சின்ன பிள்ளையார்மேடு சம்பத் (24), விமல்ராஜ் (28) ஆகியோரை கைது செய்தனர்.
÷கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட அரிவாள் கைப்பற்றப்பட்டது. கொலை தொடர்பாக மேலும் 3 பேரைப் போலீஸôர் தேடி வருகிறார்கள்.